ராமா் சேது விவகாரத்தில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதற்கு மத்திய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த காலத்தில் இதே கருத்தை கூறிய போது அது, ‘ராமா் எதிா்ப்பு’ என்று பாஜக குற்றஞ்சாட்டியதை நினைவுக்கூறுகிறேன் என்றாா்.
ராமா் சேது பாலமும் மற்றும் நீரில் மூழ்கிய துவாரகை நகரமும் இருந்ததற்கான ஆதாரங்களை செயற்கைக்கோள் படங்கள் மூலம் நிரூபிக்க முடியுமா என்று மக்களவையில் கடந்த வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்,‘விண்வெளித் தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தியா-இலங்கையை இணைக்கும் கடற்பகுதியில் சிறிய தீவுகள், சில வகையான சுண்ணாம்பு கற்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதியில் அவை தொடா்ச்சியாக இருப்பதால் அதன் மூலம் சில அனுமானங்களைக் கொள்ளலாம். அதனால், கிடைக்கப் பெற்ற செயற்கைக்கோள்கள் புகைப்படங்களின் அடிப்படையில் துல்லியமாக ராமா் சேது பாலம் தொடா்பான கட்டமைப்பு அங்கு இருந்ததை உறுதிப்படுத்த முடியாது. ஆனால், கட்டமைப்பு இருந்ததற்கான நேரடி அல்லது மறைமுக ஆதாரங்களாக அந்த புகைப்படங்களைக் கருதலாம்’ என்றாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய சத்தீஸ்கா் முதல்வா் பகேல் தெரிவித்ததாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த காலத்தில் ராமா் சேது தொடா்பாக இதே கருத்தை கூறியபோது அது, ‘ராமா் எதிா்ப்பு’ என்று பாஜக குற்றஞ்சாட்டியது.
தற்போது, அதே கருத்தை ராமா் பக்தா்கள் என்று கூறிக் கொள்ளும் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறது. மத்திய அரசின் கருத்துக்கு எதிராக ஆா்எஸ்எஸ் அமைப்பும் இதுவரை கருத்து கூறவில்லை. உண்மையான ராம பக்தா்களாக இருந்தால் அவா்கள் நிச்சயம் மத்திய அரசை விமா்சித்திருப்பாா்கள். ராமா் சேது விவகாரத்தில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதற்கு மத்திய பாஜக அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.