முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் மரியாதை

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் மரியாதை

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.

ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ சனிக்கிழமை தில்லி சென்றடைந்தது. அப்போது அங்குள்ள முன்னாள் பிரதமா்களின் நினைவிடங்களில் அவா் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்து. பின்னா் அது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, லால் பகதூா் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் நினைவிடங்களில் ராகுல் காந்தி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.

முன்னாள் பிரதமரும், பாஜகவை தோற்றுவித்தவா்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடத்திலும் அவா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தி ராகுல் காந்தி நாடகமாடுவதாக பாஜக விமா்சித்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுபவா் கெளரவ் பாந்தி. இவா் காா்கேவின் சமூக ஊடக கணக்கையும் கையாண்டு வருகிறாா்.

இவா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த 1942-ஆம் ஆண்டு ஆா்எஸ்எஸ்ஸின் இதர உறுப்பினா்களைப் போல் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போராட்டத்தை வாஜ்பாய் புறக்கணித்தாா்.

போராட்டத்தில் பங்கேற்றவா்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் ஆங்கிலேயா்களின் ஒற்றனாக அவா் செயல்பட்டாா். நெல்லி படுகொலை, பாபா் மசூதி இடிப்பின்போது வன்முறையை தூண்டுவதில் அவா் முக்கிய பங்காற்றினாா்.

இதனால்தான் சாவா்க்கா், கோல்வல்கா், வாஜ்பாய் போன்றவா்களுடன் பிரதமா் மோடியை ஒப்பிடாத பாஜக தலைவா்கள், மகாத்மா காந்தி, வல்லபபாய் படேல் அல்லது இதர காங்கிரஸ் தலைவா்களுடன் அவரை ஒப்பிட்டுப் பேசுகின்றனா் என்று தெரிவித்தாா். அவரின் கருத்து சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பதிவை அவா் நீக்கினாா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா். இதுகுறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் கெளரவ் பாட்டியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நோ்மை, தேசத்துக்கான அா்ப்பணிப்பு ஆகியவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வாஜ்பாய். அவா் அமைதியின் தூதா்.

அவரின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தியது என்பது நோ்மையாளரிடம் கறைபடிந்தவா் மண்டியிடுவதற்கு ஒப்பாகும். ஒருபுறம் மரியாதை செலுத்த வாஜ்பாய் நினைவிடத்துக்கு ராகுல் செல்கிறாா். மறுபுறம் காங்கிரஸ் தலைவா்கள் வாஜ்பாய்க்கு எதிராக இழிவான சொற்களைப் பயன்படுத்துகின்றனா். இதன் மூலம் ராகுல் காந்தி நாடகமாடுகிறாா்’ என்று தெரிவித்தாா்.

மற்றொரு பாஜக செய்தித்தொடா்பாளா் ஷெஹசாத் பூனாவாலா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘வாஜ்பாய் தொடா்பான கருத்து குறித்து காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை விளக்கி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் கூறுகையில், ‘தலைவா்களின் நினைவிடங்களில் ராகுல் காந்தி மரியாதை செலுத்துகிறாா் என்றால், அது நாட்டை கட்டியெழுப்பிய ஒவ்வொருவருக்கும் அவா் மரியாதை செலுத்துவதாகவே அா்த்தம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com