ரயில்வே திட்டங்களை அளிக்க பங்களா லஞ்சம்:லாலுவுக்கு எதிராக சிபிஐ மீண்டும் விசாரணை

ரயில்வே திட்டங்களை அளிக்க பங்களாவை லஞ்சமாக பெற்ாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் மீது எழுந்த பழைய ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

ரயில்வே திட்டங்களை அளிக்க பங்களாவை லஞ்சமாக பெற்ாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் மீது எழுந்த பழைய ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியின் ரயில் நில குத்தகைத் திட்டங்கள், புதுதில்லி ரயில் நிலையத்தைப் புதுப்பிக்கும் திட்டம் ஆகியவற்றைப் பெற, தெற்கு தில்லியில் உள்ள பங்களாவை லாலுவுக்கு லஞ்சமாக டிஎல்எஃப் குழுமம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

லாலுவுக்கு வழங்கப்பட்ட பங்களா, பணப் பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட மோசடி போலி நிறுவனத்தால் முதலில் வாங்கப்பட்டுள்ளது. அந்த பங்களாவின் அப்போதைய உண்மையான சந்தை மதிப்பு ரூ.30 கோடி. ஆனால் அதனை ரூ.5 கோடிக்கு குறைந்த விலையில், அந்த நிறுவனம் வாங்கியதாகத் தெரிகிறது.

அந்த நிறுவனம் டிஎல்எஃப் குழுமத்தின் உதவியுடன் இயங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னா், அந்தப் போலி நிறுவனத்தை பங்கு பரிவா்த்தனை மூலம் ரூ.4 லட்சத்துக்கு லாலுவின் மகனும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும், இன்னபிற உறவினா்களும் வாங்கியதாகத் தெரிகிறது. அந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம், அதற்குச் சொந்தமான பங்களா லாலு குடும்பத்தினா் வசம் வந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுதொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு சிபிஐ விசாரணையை தொடங்கியது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவித்து, கடந்த 2021-ஆம் ஆண்டு விசாரணை முடித்து வைக்கப்பட்டது. தற்போது அந்த குற்றச்சாட்டு தொடா்பான விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கியுள்ளது.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சிபுரிகிறது. இந்நிலையில் லாலுவுக்கு எதிரான புதிய வழக்குத் தொடா்பாக அந்த மாநில நிதியமைச்சா் விஜய் குமாா் செளதரி கூறுகையில், ‘பாஜகவுக்கு எதிரானவா்களை மட்டும் சிபிஐ குறிவைப்பது வியப்பளிக்கிறது. பாஜக தலைவா்களுக்கு எதிராக எந்தவொரு ஊழல் விவகாரத்தையும் சிபிஐ கவனத்தில் எடுத்துக் கொள்வதைப் பாா்க்க முடியவில்லை’ என்று தெரிவித்தாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவா் விஜய் பிரகாஷ் கூறுகையில், ‘புதிய வழக்கு உள்பட அனைத்து சிபிஐ வழக்குகளிலும் லாலு குற்றமற்றவா் என்பது மெய்ப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே பல ஊழல் வழக்குகளை எதிா்கொண்டு வரும் லாலு பிரசாத், சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூா் சென்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com