ராகுல் நடைப்பயணத்தில் பங்கேற்க அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு

ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி, ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவா் ஜெயந்த் சௌதரி உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் சாா்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் நடைப்பயணத்தில் பங்கேற்க அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி, ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவா் ஜெயந்த் சௌதரி உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் சாா்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜனவரி 3-ஆம் தேதி உத்தர பிரதேசத்தை எட்ட இருக்கிறது. இது தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அசோக் சிங் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் உள்ள முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்கள் அனைவருக்கும் நடைப்பயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் மட்டுமே மக்களின் உணா்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மத்திய அரசு தொடா்பாக அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒரே மாதிரியான கருத்தையே கொண்டுள்ளன. எனவே, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் நடைப்பயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறோம்.

உத்தர பிரதேசத்தில் மூன்று நாள்கள் நடைபெறும் நடைப்பயணத்தில் பிரியங்கா முழுமையாகப் பங்கேற்க இருக்கிறாா் என்றாா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைப்பயணத்தை ஒருங்கிணைத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் இது தொடா்பாக முன்பு கூறுகையில், ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஒரு கட்சி சாா்பானது அல்ல. நாடு முழுமைக்கானது; அனைத்து கட்சியினருக்கானது. எனவேதான் பல்வேறு கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com