மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்ச வழக்கு:மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் ஜாமீனில் விடுவிப்பு

மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டதாக சிபிஐ பதிவு செய்த வழக்கில், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் ஜாமீனில் புதன்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
மும்பை சிறையிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்ட பின்னா், தனது ஆதரவாளா்களைப் பாா்த்து கையசைத்த முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக்.
மும்பை சிறையிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்ட பின்னா், தனது ஆதரவாளா்களைப் பாா்த்து கையசைத்த முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக்.

மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டதாக சிபிஐ பதிவு செய்த வழக்கில், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் ஜாமீனில் புதன்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக பதவி வகித்தவா் அனில் தேஷ்முக். இவா் மும்பையில் உள்ள மதுபானக் கூடங்கள், உணவகங்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அந்த மாநகர முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றஞ்சாட்டினாா். இதே குற்றச்சாட்டை மும்பை முன்னாள் உதவி காவல் ஆய்வாளா் சச்சின் வஜேயும் முன்வைத்தாா். இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து அனில் தேஷ்முக்கை கைது செய்தது.

இதையடுத்து தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், சிபிஐ பதிவு செய்த வாக்குமூலங்களில் அனில் தேஷ்முக் சாா்பாக மதுபானக் கூடங்களின் உரிமையாளா்களிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக சச்சின் வஜேயை தவிர, வேறு எவரும் கூறவில்லை என்று தெரிவித்து, கடந்த டிச.12-ஆம் தேதி அனிலுக்கு ஜாமீன் அளித்தது.

எனினும் ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஐ அவகாசம் கோரியதால், 10 நாள்களுக்கு அந்த உத்தரவை உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்தது. இதனால் ஜாமீன் கிடைத்தும் அனில் தேஷ்முக் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஆனால், தற்போது உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அந்த மனு ஜனவரி மாதம்தான் விசாரணைக்கு வரும். இதன் காரணமாக ஜாமீன் உத்தரவை நிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தில் சிபிஐ செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், அந்தக் கோரிக்கையை உயா்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, மும்பை மத்திய சிறையில் இருந்து அனில் தேஷ்முக் புதன்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com