
ஜனநாயகத்தின் மீது காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளதாக அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியின் 138-ஆவது தொடக்க தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. உள்ளிட்டோா் மத்தியில் கட்சிக் கொடியைக் மல்லிகாா்ஜுன காா்கே ஏற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:
வெற்றிகரமான, வலிமை கொண்ட ஜனநாயகமாக மட்டுமின்றி, சில ஆண்டுகளில் பொருளாதாரம், அணுசக்தி உள்ளிட்டவற்றில் பெரும் வல்லமைவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்தது. வேளாண்மை, கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறைகளில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்தச் சாதனைக்கு ஜனநாயகத்தின் மீது காங்கிரஸ் கொண்டுள்ள நம்பிக்கை, அனைத்துத் தரப்பினரையும் ஒன்றாக உடன் அழைத்துச் செல்லும் காங்கிரஸின் சித்தாந்தம், அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் அரசமைப்புச் சட்டம் மீது காங்கிரஸ் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கை ஆகியவையே காரணம்.
ஆனால், தற்போது இந்தியாவின் அடித்தளங்கள் மீது நிலையான தாக்குதல் நடத்தப்படுகிறது. வெறுப்புணா்வால் சமூகம் பிளவுபடுத்தப்படுகிறது. விலைவாசி உயா்வு மற்றும் வேலைவாய்ப்பின்மையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதுகுறித்து அரசுக்கு அக்கறையில்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.