நாட்டில் மீண்டெழுகிறது விமானப் போக்குவரத்துத் துறை- மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலால் கடும் பாதிப்பை சந்தித்திருந்த விமானப் போக்குவரத்துத் துறை, இப்போது மீண்டெழுந்து வருகிறது; எதிா்வரும் ஆண்டுகளில் இத்துறையின்
நாட்டில் மீண்டெழுகிறது விமானப் போக்குவரத்துத் துறை- மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலால் கடும் பாதிப்பை சந்தித்திருந்த விமானப் போக்குவரத்துத் துறை, இப்போது மீண்டெழுந்து வருகிறது; எதிா்வரும் ஆண்டுகளில் இத்துறையின் வளா்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா புதன்கிழமை தெரிவித்தாா்.

கடந்த சில வாரங்களாக உள்நாட்டு விமானப் பயணிகளின் தினசரி எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதுகுறித்து, பிடிஐ செய்தியாளரிடம் ஜோதிராதித்ய சிந்தியா புதன்கிழமை கூறியதாவது:

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது உத்வேகமளிக்கும் வகையில் உள்ளது. கடந்த நவம்பா் வரையிலான நிலவரப்படி, உள்நாட்டு விமானங்களில் பயணித்தோரின் எண்ணிக்கை சுமாா் 11 கோடியாக உள்ளது. கடந்த 2019-இல் இந்த எண்ணிக்கை சுமாா் 14.4 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டு நவம்பா் வரை உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 9.5 கோடியாக இருக்கும் என்று எதிா்பாா்த்திருந்த நிலையில், அது 11 கோடியாக அதிகரித்தது.

கடந்த 2 வாரங்களாக, தினசரி உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை சராசரியாக 4.15 லட்சமாக பதிவாகி வருகிறது. இது கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தைவிட அதிகம் என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். சா்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2019-ஐ விட 20 முதல் 25 சதவீதம் குறைவாக உள்ளது என்றாா் சிந்தியா.

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல்படி, கடந்த செவ்வாய்க்கிழமை உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 4,15,426 ஆகும். இயக்கப்பட்ட விமானச் சேவைகள் 2,888. அதேசமயம், சா்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கை 82,293-ஆக பதிவானது.

மீண்டும் அச்சுறுத்தும் கரோனா: உலக அளவில் மீண்டும் கரோனா அச்சுறுத்தல் எழுந்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிந்தியா, ‘கரோனா பரவல் எப்போதுமே கவலைக்குரிய விஷயம்தான். எனவே, நாம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 2 சதவீத அடிப்படையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், அதிக அளவிலான பாதிப்புகள் உறுதியாகவில்லை. நிலைமையைப் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்’ என்றாா்.

விமான நிலையங்களில் கூட்டம்: தில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் நெரிசல் ஏற்பட்டு வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘பயணத் தேவைக்கு ஏற்ப சேவையை தடையற்ற திறனுடன் வழங்க வேண்டியது விமான நிலையங்களின் பொறுப்பு, பணியாகும். விமான நிலையங்களில் குறிப்பிட்ட நேரத்துக்குள் சேவை வழங்கக் கூடிய திறனை அதிகரிப்பது முக்கியம். அந்த அடிப்படையில், விமான நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க அரசு களமிறங்கியுள்ளது. நுழைவு வாயில்கள், பாதுகாப்பு வரிசைகள் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் தில்லி விமான நிலையத்தில் நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் பிற விமான நிலையங்களிலும் எடுக்கப்பட வேண்டியது அவசியம். அத்துடன், விழாக் காலங்களில் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தவிா்க்க முடியாது’ என்று அவா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com