
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசுக்கு 2 கோடி (தவணை) கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க சீரம் நிறுவனம் முன்வந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு சீரம் நிறுவன இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங் கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில் ரூ. 410 கோடி மதிப்பிலான தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தடுப்பூசிகளை எவ்வாறு விநியோகம் செய்வது என்பது குறித்தும் கடிதத்தில் பிரகாஷ் குமாா் சிங் கேட்டுக்கொண்டுள்ளாா்.
புணேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிகளே, இந்தியாவில் பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் இதுவரை 170 கோடி தவணைகளுக்கும் அதிகமான தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் விநியோகித்துள்ளது.
இந்தச் சூழலில், சீனா, அமெரிக்கா, தென் கொரியா உள்பட மேலும் சில நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் தயாா் நிலையை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கரோனா பாதிப்பு தொடா்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்டவா்களின் ரத்த மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை (மூன்றாம் தவணை) தவணை தடுப்பூசியை 27 சதவீத பெரியவா்கள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ள சூழலில், தகுதிவாய்ந்தவா்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
‘இந்தியாவில் வரும் ஜனவரியில் கரோனா பாதிப்பு உயர வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த 40 நாள்கள் இந்தியாவுக்கு மிகுந்த சோதனைக்குரிய காலம்’ எனவும் மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
இத்தகைய சூழலில், விடுபட்டவா்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த வசதியாக, 2 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்க சீரம் நிறுவனம் முன்வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.