2022-ல் முக்கிய அரசியல் நகர்வுகள்!

இந்த ஆண்டில் தேசிய அளவில் நடைபெற்ற முக்கியமான அரசியல் நகர்வுகளை ஒரு மீள் பார்வையாகப் பார்க்கலாம்...
2022-ல் முக்கிய அரசியல் நகர்வுகள்!

ஜனநாயக நாட்டில் பெரும் மாற்றத்துக்கு அடித்தளமாக அமைவது அரசியல்  
மாற்றங்கள். அன்றாட நிகழ்வுகளில், அரசியல் நிகழ்வுகள் எந்த அளவுக்கு  
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அரசியல்வாதிகளிடையே நடக்கும் அதிகார மோதல் நடவடிக்கை மூலம் அறிய முடியும். அப்படி இந்த ஆண்டில் தேசிய அளவில் நடைபெற்ற முக்கியமான அரசியல் நகர்வுகளை ஒரு மீள் பார்வையாகப் பார்க்கலாம்...

குஜராத் தேர்தல், பாஜக வரலாற்று வெற்றி

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக (டிச.1 மற்றும் 5)  
நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக வாக்குகளைப் பெற்று  
வரலாற்று வெற்றியை அடைந்தது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளில் 156  
தொகுதிகளில் பாஜக வெற்றி அடைந்தது. இதன் மூலம் 1985ஆம் ஆண்டு  
குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் 149 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் சாதனை முறியடிக்கப்பட்டது. 2002-ல் 127 தொகுதிகளைக் கைப்பற்றியதே பாஜகவின் சாதனையாக இருந்தது. தொடர்ந்து 7வது முறையாகவும் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. பூபேந்திர படேல் 2வது முறையாக டிச. 12-ல் ஆட்சிப் பொறுப்பேற்றார். 

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, பாஜக சார்பில் போட்டியிட்டு ஜாம்நகர் வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வானார். அகமதாபாத்தின் பாபு நகரில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெறும் 30 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

தில்லி, பஞ்சாபில் ஆட்சியை பிடித்த நம்பிக்கையில், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் குஜராத்திலும் ஆம் ஆத்மி கால் பதித்தது. 5 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. 

ஹிமாசல் தேர்தல், காங்கிரஸுக்கு ஆறுதல்

ஹிமாசலில் ஆட்சியில் இருந்த பாஜகவின் பதவிக்காலம் முடிந்ததால், டிச. 8-ல்  
பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுடைய ஹிமாசலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று இம்முறை  ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறும் தன்மை கொண்டது ஹிமாசல். அதனை அம்மாநில மக்கள் இம்முறை தேர்தலிலும் காத்துள்ளனர். எனினும் பாஜக - காங்கிரஸ் இடையேயான வாக்கு வித்தியாசம் 0.9 சதவிகிதம்தான். அதனால், காங்கிரஸுக்கு இது ஆறுதல் வெற்றிதான்.

ஹிமாசல் தேர்தல் வெற்றிக்குப்பிறகு காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கு பலமுனைப் போட்டி நிலவியது. காங்கிரஸ் தலைமை ஆலோசனைக்குப் பிறகு லாரி ஓட்டுநரின் மகனான, சுக்விந்தர் சிங் சுக் டிச.11-ல் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி. ஹிமாசல் எதிர்க்கட்சித் தலைவராக ஜெய்ராம் தாக்குர் தேர்வானார். 

மகாராஷ்டிரத்தில் ஆட்சி கவிழ்ப்பு

மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  கூட்டணியில் அமைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி, இந்த ஆண்டில் சரிவு கண்டது.  உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி என சிவசேனை கட்சி இரண்டாகப் பிரிந்தது.

சிவசேனை கட்சி நிறுவனர் பால் தாக்கரே, தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சிகளுடன் உத்தவ் கூட்டணி வைத்ததால், அக்கட்சியில் கிளர்ச்சி ஏற்பட்டது.

சிவசேனை மீது அதிருப்தி கொண்ட ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரின்  
ஆதரவாளர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். உத்தவ் தாக்கரே ஆதரவு  
உறுப்பினர்களும் ஷிண்டே அணிக்குத் தாவினர். இதனால் மாநில முதல்வர்  
பதவியை உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜூலை 8ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். 

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி

தில்லியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியைப் பரப்பியது இந்த  ஆண்டுதான். 117 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு  பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 92  இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. புதிய முதல்வராக மார்ச் 16ஆம் தேதி பகவந்த் மான் பதவியேற்றுக்கொண்டார். 

வீடுகளுக்கே ரேஷன் பொருள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் குறைப்பு போன்றவை பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்பேற்றதும் செய்த அதிரடி மாற்றங்கள்.

கோவாவில் மீண்டும் பாஜக

கோவா சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றி மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வராக  மார்ச் 18-ல் பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார். இதில் காங்கிரஸ் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கோவா தேர்தலிலும் ஆம் ஆத்மி களம் கண்டு 2 தொகுதிகளில்  வெற்றியடைந்தது.

மணிப்பூர் தேர்தல்

மணிப்பூர் மாநிலத்துக்கு பிப்ரவரி 28, மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு  
கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 60 தொகுதிகளைக் கொண்ட  
மணிப்பூரில் 32 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதனால், தொடர்ந்து 2-வது  முறை முதல்வராக என். பிரேன் சிங் பதவியேற்றார்.  இதில் காங்கிரஸ் கட்சி வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.


உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி

இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு  
நடைபெற்றது உத்தரப் பிரதேசத்தில்தான். 403 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டங்களாக (பிப். 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7) தேர்தல் நடைபெற்றது. 

இதில் பாஜக (255) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 125 இடங்களில் வென்றது. பாஜக மீண்டும் ஆட்சி அமைத்திருந்தாலும், காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி தங்கள் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது. 

உத்தரகண்ட் வரலாற்றை மாற்றியது பாஜக

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் தொடர்ந்து எந்தவொரு கட்சியும் அடுத்தடுத்து ஆட்சி அமைத்ததில்லை. ஆனால் இம்முறை பாஜக அதனை முறியடித்தது. கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. 

பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47-ல் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களில் வென்றது. இதனால், புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து 2வது முறையாக உத்தரகண்ட் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார்.

புதிய கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், விலகியது இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் ஒன்று. ஜம்மு காஷ்மீர் ஆதரவாளர்கள் பலரும் காங்கிரஸிலிருந்து விலகினர். 

பாஜாகவையும் புறக்கணித்த ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பது, மக்களின் நலன், வளர்ச்சி சார்ந்து செயல்படுவதை கட்சியின் நோக்கமாகவும் அறிவித்தார். 

காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

இந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, 2024 
மக்களவைத் தேர்தலை குறிவைத்து  காங்கிரஸ் இயங்கத் தொடங்கியது. அதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சித் தலைமையை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் தலைவருக்கானத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்   
மல்லிகார்ஜுன கார்கே, திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர். அக்டோபர் 17-ல் நடைபெற்ற காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி பெற்றார்.   இந்த தேர்தலில் 9500 வாக்குகள் பதிவாகின.

24 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் நேரு குடும்பத்தைச் சாராத நபராக கார்கே விளங்குகிறார். மேலும், ஜகஜீவன் ராமுக்குப் பிறகு காங்கிரஸ் தலையேற்றிருக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 2வது தலைவர் கார்கே.

மல்லிகார்ஜுன கார்கே வெற்றிக்கு பிறகு நடைபெற்ற குஜராத், ஹிமாசல் தேர்தலில், ஹிமாசலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு

ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜுலையுடன் முடிந்தது. இதனால், ஜுலை 18-ல் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹ போட்டியிட்டனர். இதில் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற திரெளபதி முர்மு ஜுலை 25-ல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண், முதல்முறையாக குடியரசுத் தலைவரான பெருமையையும் இந்த ஆண்டு பெற்றுள்ளது.

ராகுல் காந்தி ஒற்றுமைப் பயணம்

2024 மக்களவைத் தேர்தலை இலக்காக வைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை இந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார். அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த பயணம் நிறைவடையவுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாள்களுக்கு 3,570 கி.மீட்டருக்கு நடைபெறவுள்ள இப்பயணம் தற்போது தலைநகரான தில்லியை அடைந்துள்ளது. தில்லியில் புத்தாண்டு விடுமுறை முடித்து மீண்டும்  நடைப்பயணம் தொடங்கவுள்ளது. 

இப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் பல்வேறு மாநில தலைவர்கள் பங்கேற்று  
தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும்  
நடைப்பயணத்தில் பங்கேற்கின்றனர். 

எனினும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிக நாள்கள் நடைப்பயணம்  
மேற்கொள்வதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கொள்வதே முக்கியம் என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன. 

கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்படும் சூழலில், நடைப்பயணம் மேற்கொள்வது முட்டாள்தனமானது என பாஜக விமர்சித்துள்ளது. எனினும் திட்டமிட்டபடி கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைப்பயணம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை

இந்தியா சீன எல்லைப் பிரச்னை அடிக்கடி நடைபெறுவதாக இருந்தாலும்,  
அருணாசலப் பிரதேச எல்லையின், தவாங் செக்டாரிலுள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய, சீன படைகளிடையே மோதல் ஏற்பட்டது இந்த ஆண்டு அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதில், இரு நாட்டு வீரர்களும் காயமடைந்ததாகவும், தலைமை அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

இதேபோன்று கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளிடையே 17வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. 2020 மே 5-ல் கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.

முலாயம் சிங் யாதவ் மறைவு 

உத்தரப் பிரதேச முதல்வர், பாதுகாப்புத் துறை அமைச்சர் என பல்வேறு  
பொறுப்புகளை வகித்தவரும், சமாஜவாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் அக்டோபர் 10ஆம் தேதி வயது மூப்பு காரணமாக காலமானார். 

இதனை அடுத்து அவர் வெற்றி பெற்ற மெயின்புரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அவரின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங்கை விட 71,000 வாக்குகள் அதிகம் பெற்று டிம்பிள் வெற்றி பெற்று மாமனார் இடத்தைப் பிடித்தார்.

அமலாக்கத் துறையிடம் ராகுல், சோனியா

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் தில்லி அமலாக்கத் துறையினர் ஜுன் 13ஆம் தேதி முதல் விசாரணை நடத்தினர். கரோனாவிலிருந்து குணமடைந்திருந்த சோனியா காந்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி போன்ற பிரச்னைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை சீர்குலைக்கவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தப்படுவதாக காங்கிரஸ் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

ஹிஜாப் போராட்டம், திருப்பம்

கர்நாடகத்தில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர கல்வி நிறுவனங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் பல்வேறு மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். - பாஜகவைச் சேர்ந்தவர்கள் பெரும் போராட்டங்களையும் அத்துமீறல்களிலும்  ஈடுபட்டனர். 

ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வரத் தடை விதிக்கக்கூடாது என உடுப்பி கல்லூரி மாணவிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற அமா்வின் இரு நீதிபதிகளும் ஹிஜாப் அணிந்து  வரலாம், அணிந்து  வரக்கூடாது என இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதும் இந்த ஆண்டில் அரங்கேறியது. 

இன்னொரு அயோத்தி ஞானவாபி 

அயோத்தி விவகாரம் போன்று ஞானவாபி மசூதி விவகாரம் இந்த ஆண்டில் பூதாகரமானது. 

உத்தர பிரதேசத்தின் வாராணசி காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகேவுள்ள ஞானவாபி மசூதி, ஹிந்து கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டது என்று கூறி, மசூதி சுவரின் பின்னால் உள்ள கடவுள்களை வழிபட அனுமதிக்கக்கோரி சில ஹிந்து மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த மனுவின் மீதான விசாரணை 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்று வருகிறது. 

மசூதியில் நீரைத் தேக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ளதாக கூறப்படும் சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிடுவதற்காக காா்பன் ஆய்வு முறையை நடத்த வேண்டும் என்ற மனுவின் மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. 

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுவிப்பு

பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமைக்கு காரணமாக 11 குற்றவாளிகள் இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி விடுதலை செய்யப்பட்டனர்.

2002 குஜராத் கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய  
குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்த ஆண்டு இறுதியில்தான்.

11 குற்றவாளிகளின் தண்டனைக் காலம் முடியும் முன்பு விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை விசாரித்து வந்த நீதிபதிகளில் ஒருவரான, நீதிபதி பெலா எம். திரிவேதி காரணங்களைக் குறிப்பிடாமல் வழக்கிலிருந்து  விலகியதும் இந்த ஆண்டில்தான்.

இவ்வாறு இந்த ஆண்டில் நடைபெற்ற அரசியல் நகர்வுகள் ஏராளம். இவை வரிசைப்படுத்தல் அல்ல. அரசியல் சார்ந்து எந்த முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் இழப்புகளும் அதிகாரமற்ற நடுத்தர மக்களையே சேருகிறது. 2022-ன் அரசியல் நிகழ்வுகள் நேர்மறையாக பிரதிபலிக்கும் வகையில் 2023-ஐ அமைத்துக்கொள்ள முயற்சிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com