ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

மறு ஆய்வுக்கு முன்பு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்; அதன்பிறகே மறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வள ஆணையம், மேற்பார்வைக் குழு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 11:10 pm

 நமது நிருபர்


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்; அதன்பிறகே மறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வள ஆணையம், மேற்பார்வைக் குழு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு, மத்திய நீர்வள ஆணையம் ஆகியவற்றின் தரப்பில் கடந்த ஜன. 27ஆம் தேதி ஒரு நிலவர அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்யும் தேவை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலவர அறிக்கைக்கு தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வி.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் ஜி.உமாபதி ஆகியோர் ஆலோசித்து, வழக்குரைஞர் டி.குமணன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 

முல்லைப் பெரியாறு அணை எல்லா வகையிலும் நல்ல நிலையில் உள்ளது. அணையிலிருந்து நீர்க்கசிவு விகிதம் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்க்கசிவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்தான் உள்ளது. சுண்ணாம்பு வெளியேறுவதும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கீழ்தான் உள்ளது. அணையில் சிதைவோ அல்லது அசாதாரண சூழலோ இல்லை. மேலும், அணையின் வண்டல் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்த நீர் ஆண்டில் (202122), அணையில் 2021, நவம்பர் 30 முதல் சுமார் 18 நாள்களுக்கு 142 அடி நீர் தேக்கிவைக்கப்பட்டது. அணையின் அனைத்து அளவீடுகளும் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் காணப்பட்டன. 

ஆகவே, தற்போது 142 அடி மற்றும் அதற்கு மேல் நீரைச் சேமித்து வைப்பதற்காக அணையின் பாதுகாப்பு குறித்து புதிதாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கான காரணமோ அல்லது தேவையோ இல்லை. அணை விவகாரத்தில், உச்சநீதிமன்றம், மேற்பார்வைக் குழு ஆகியவற்றின் உத்தரவின்பேரில் மீதமுள்ள வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள தமிழகம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்தபோதிலும் கேரள மாநிலம் அதை தடுத்துவிட்டது.

மேற்பார்வைக் குழுவின் பல்வேறு கூட்டங்களின்போது இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட நிலையிலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த மேற்பார்வைக் குழுவும் தவறிவிட்டது. இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். மேற்பார்வைக் குழுவின் முடிவுகள் காலவரையறைக்குள் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளை அளிக்கவும், ஒத்துழைக்கவும் கேரள மாநிலத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

அப்போதுதான், உச்சநீதிமன்றம் 2006, பிப். 27 மற்றும் 2014, மே 7 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்பார்வைக் குழுவின் இதர முடிவுகளை விரைந்து செயல்படுத்தும் வகையில், அடுத்த தென்மேற்குப் பருவமழைக்கு முன், வரும் மார்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களில் மீதமுள்ள வலுப்படுத்துதல் மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செயல்படுத்த முடியும். 

இந்தப் பணிகள் முடிந்த பிறகே, அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வள ஆணையம், மேற்பார்வைக் குழு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.