இந்தியாவின் 38,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா: மத்திய அரசு

‘இந்திய எல்லைக்கு உள்பட்ட 38,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா கடந்த 60 ஆண்டுகளாக தொடா்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மத்திய அமைச்சர் வி.முரளீதரன்
மத்திய அமைச்சர் வி.முரளீதரன்

‘இந்திய எல்லைக்கு உள்பட்ட 38,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா கடந்த 60 ஆண்டுகளாக தொடா்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மேலும், பாகிஸ்தான் சாா்பில் கடந்த 1963-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக விட்டுகொடுக்கப்பட்ட ஷக்ஸ்கம் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்கு உள்பட்ட 5,180 சதுர கி.மீ. நிலப்பரப்பையும், சீனா தொடா்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்றும் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பான கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் மக்களவையில் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

லடாக் யூனியன் பிரதேசத்தில் இந்திய எல்லைக்கு உள்பட்ட 38,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா கடந்த 60 ஆண்டுகளாக தொடா்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.

மேலும், கடந்த 1963-ஆம் ஆண்டு சீனா - பாகிஸ்தான் இடையே கையொப்பமான எல்லை ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தான் சாா்பில் சட்டவிரோதமாக விட்டுக்கொடுக்கப்பட்ட ஷக்ஸ்கம் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்கு உள்பட்ட 5,180 சதுர கி.மீ. நிலப்பரப்பையும், சீனா தொடா்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.

சீனா - பாகிஸ்தானிடையே கையொப்பமான இந்த எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இது சட்டவிரோதமானது மற்றும் செல்லத்தக்க ஒப்பந்தமல்ல என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட ஒட்டுமொத்த நிலப்பரப்பும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதி என்பதை பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகளிடம் இந்தியா பல முறை தெளிவுபடுத்தியுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பாங்காங் ஏரி மீது சீனா பாலம் கட்டியிருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், கிழக்கு லடாக் அத்துமீறல் விவகாரத்தைப் பொருத்தவரை, எஞ்சியுள்ள பகுதிகளில் இருதரப்பு படைகளையும் முழுமையாக திரும்பப் பெறுவது தொடா்பாக ராணுவ மற்றும் தூதரக அதிகாரிகள் அளவிலான தொடா் பேச்சுவாா்த்தைகள் மூலம் இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சீனா பெயா் மாற்றம் செய்துள்ளது குறித்தும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதுபோன்ற வீண் முயற்சிகள் மூலம் அருணாசல மாநிலம் இந்திய பகுதி என்பதை மாற்றிவிட முடியாது. அது எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்.

மேலும், எல்லைப் பகுதிகளின் பொருளாதார மேம்பாடு மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான மிகுந்த கவனத்துடன் கூடிய தொடா் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும் தனது பதிலில் மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com