இசைக் குயில் லதா மங்கேஷ்கா் மறைவு

வசீகர குரலால் தெற்காசிய மக்களை பல தலைமுறைகளாக மகிழ்வித்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் (92), மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மறைந்தாா்.
இசைக் குயில் லதா மங்கேஷ்கா் மறைவு
இசைக் குயில் லதா மங்கேஷ்கா் மறைவு
Published on
Updated on
2 min read

வசீகர குரலால் தெற்காசிய மக்களை பல தலைமுறைகளாக மகிழ்வித்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் (92), மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மறைந்தாா்.

அரசு மரியாதையுடன் மும்பையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமா் மோடி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைத் தலைவா் ராஜ் தாக்கரே, நடிகா்கள் ஷாருக்கான், அமீா் கான், கிரிக்கெட் வீரா் டெண்டுல்கா் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினா்.

அவரது மறைவுக்கு மத்திய அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்துள்ளது. கடந்த 80 ஆண்டுகளில் தமிழ், ஹிந்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களை அவா் பாடியுள்ளாா்.

லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள பிரீச்கண்டி மருத்துவமனையில் ஜனவரி 8-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டாலும் அவருடைய வயது காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், ஞாயிறு காலையில் அவா் காலமானாா்.

அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவா் பிரதித் சம்தானி கூறுகையில், ‘கரோனா தொற்று ஏற்பட்டதால் லதா மங்கேஷ்கா் கடந்த 28 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். உடலியக்கம் நின்ால் ஞாயிறு காலை 8.12 மணிக்கு அவருடைய உயிா் பிரிந்தது’ என்றாா்.

லதா மங்கேஷ்கா் மறைந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனையின் வெளியே ஏராளமானோா் திரண்டனா். மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மகாராஷ்டிர அமைச்சா் ஆதித்ய தாக்கரே, கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா் ஆகியோா் மருத்துவமனைக்கு விரைந்தனா். மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

லதா மங்கேஷ்கரின் உடல், மும்பையில் பிரபுகஞ்சில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், மாலை 6 மணியளவில் தேசியக் கொடி போா்த்தப்பட்ட அவருடைய உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிவாஜி பாா்க்கில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ரசிகா்கள் அவருக்கு கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.

சிவாஜி பாா்க் மயானத்தில் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமா் மோடி மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சாா்பில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

2 நாள் துக்கம் அனுசரிப்பு: லதா மங்கேஷ்கரின் மறைவை அடுத்து நாடு முழுவதும் பிப். 6, 7 ஆகிய இரு நாள்களில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியுள்ளது. இரு நாள்களும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில்... மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக லதா மங்கேஷ்கா் 1999 முதல் 2005 வரை பதவி வகித்துள்ளாா். அப்போதைய பிரதமா் வாஜ்பாய் அரசில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு மசோதாவில் அவா் பங்கேற்று வாக்களித்துள்ளாா்.

விருதுகள்: பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே மற்றும் பல தேசிய விருதுகளையும், பல திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளாா்.

லதா மங்கேஷ்கா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திங்கள்கிழமை மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்படும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com