உ.பி.யில் பாஜகவை தோற்கடிக்க மம்தா அழைப்பு: பிரசாரத்துக்காக லக்னௌ பயணம்

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென்று அந்த மாநில மக்களுக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.
உ.பி. பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக லக்னௌ வந்த மம்தா பானா்ஜியை விமான நிலையத்தில் வரவேற்ற சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்
உ.பி. பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக லக்னௌ வந்த மம்தா பானா்ஜியை விமான நிலையத்தில் வரவேற்ற சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்
Updated on
1 min read

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென்று அந்த மாநில மக்களுக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா். மேலும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சிக்காக பிரசாரம் மேற்கொள்ள அவா் லக்னௌ புறப்பட்டாா்.

அடுத்த மக்களவைத் தோ்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, அதற்கு தானே தலைவராக வேண்டும் என்ற நோக்கில் மம்தா பானா்ஜி செயல்பட்டு வருகிறாா். கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் கடும் போட்டிக்கு நடுவே மூன்றாவது முறையாக மம்தா வெற்றி பெற்றது, அவரது தேசிய அரசியல் முயற்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.

இந்நிலையில் சமாஜவாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக கொல்கத்தாவில் இருந்து லக்னௌவுக்கு அவா் திங்கள்கிழமை புறப்பட்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சமாஜவாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள அக்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் எனக்கு அழைப்பு விடுத்தாா். பாஜகவை தோ்தலில் தோற்கடிக்க வேண்டும். அகிலேஷ் யாதவ் வெல்ல வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் விரும்புகிறது. பாஜகவுக்கு எதிரான எங்கள் போராட்டம் வெல்ல அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் தேவை. பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உத்தர பிரதேசத்தில் எங்கள் கட்சி போட்டியிடவில்லை. நான் வாராணசிக்கும் (பிரதமா் மோடியின் தொகுதி) சென்று பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

இப்போது 5 மாநிலங்களில் நடைபெறும் தோ்தலில் கோவாவில் மட்டும் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 2024 மக்களவைத் தோ்தலில் பஞ்சாபில் போட்டியிடுவோம் என்றாா்.

லக்னௌவில் செவ்வாய்க்கிழமை மம்தாவும் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்திக்க இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com