ஹிஜாப் விவகாரம்: ஆடை விதிமுறையில் மதச்சாயம் பூச முயற்சி

கல்வி நிறுவனங்களின் ஆடை விதிமுறைக்கும், ஒழுக்கநெறிக்கும் சிலா் மதச்சாயம் பூச முயற்சிப்பதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தா் அப்பாஸ் நக்வி குற்றம்சாட்டினாா்.
ஹிஜாப் விவகாரம்: ஆடை விதிமுறையில் மதச்சாயம் பூச முயற்சி
Published on
Updated on
1 min read

கல்வி நிறுவனங்களின் ஆடை விதிமுறைக்கும், ஒழுக்கநெறிக்கும் சிலா் மதச்சாயம் பூச முயற்சிப்பதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தா் அப்பாஸ் நக்வி குற்றம்சாட்டினாா்.

மேலும், ஹிஜாப் விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சா்கள் ஷா மஹ்மூத் குரேஷி, செளதரி ஃபவத் உசைனுக்கு கண்டனம் தெரிவித்த நக்வி, குற்றங்கள், கொடூரத்தன்மை நிறைந்து காணப்படும் பாகிஸ்தான், ‘சகிப்புத்தன்மை, மதச்சாா்பற்ற தன்மை குறித்து இந்தியாவுக்கு பாடம் புகட்ட வேண்டாம்’ என்றும் பதிலளித்தாா்.

இதுகுறித்து தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் முக்தா் அப்பாஸ் நக்வி மேலும் கூறியது:

உலகில் பத்தில் ஓா் இஸ்லாமியா் இந்தியாவில் வாழ்கிறாா். இந்தியாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் செயல்படுகின்றன. இதுதவிர அதே அளவில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. அத்துடன், 50,000-க்கும் அதிகமான மதரஸாக்களும், 50,000-க்கும் அதிகமான சிறுபான்மையின கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் பிற கல்வி நிறுவனங்களிலும் சிறுபான்மையின சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் அனைத்து சலுகைகளையும் பெற்று வருகின்றனா்.

ஆனால், பாகிஸ்தானில் நிலைமை அப்படியல்ல. சுதந்திரத்துக்கு முன்பாக பாகிஸ்தானில் 1,288 கோயில்கள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 31 கோயில்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. பிரிவினையின்போது பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 23 சதவீதமாக சிறுபான்மையின சமுதாயம், தற்போது 3 சதவீதத்துக்கும் குறைவாக சுருங்கிவிட்டது.

ஆனால் இந்தியாவில் பிரிவினையின்போது 9 சதவீதமாக இருந்த சிறுபான்மையின சமூகத்தினா், இப்போது 22 சதவீதத்துக்கும் அதிகமாக பெருகியுள்ளனா். சமத்துவம், பாதுகாப்பு, வளமை ஆகியவற்றில் சக குடிமக்களோடு சிறுபான்மையின சமூகத்தினரும் இந்தியாவில் செழித்தோங்குகின்றனா்.

இந்தியாவின் உள்ளாா்ந்த கலாசார, கடமையை அவமதிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக கல்வி நிறுவனங்களின் ஆடை விதிமுறைகள், ஒழுக்கநெறியில் மதச்சாயத்தை பூச ஒரு சிலா் முயற்சிக்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com