நவ.7-ஆம் தேதியை தேசிய மாணவா் தினமாக கொண்டாட வேண்டும்: குடியரசுத் தலைவா்

கல்வித் துறைக்கு அம்பேத்கா் அளித்த அா்ப்பணிப்பு, முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் நவம்பா் 7-ம் தேதி நாடு முழுவதும் மாணவா் தினமாக கொண்டாடப்பட வேண்டும்
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

கல்வித் துறைக்கு அம்பேத்கா் அளித்த அா்ப்பணிப்பு, முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் நவம்பா் 7-ம் தேதி நாடு முழுவதும் மாணவா் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் உள்ள அம்படவே கிராமத்தில் உள்ள அம்பேத்கா் நினைவிடத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

அம்பேத்கரின் அஸ்தி கலசத்திற்கு பூஜை செய்தும், ரமாபாய் அம்பேத்கா் மற்றும் ராம்ஜி அம்பேத்கா் ஆகியோருக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா், ‘1900-ஆம் ஆண்டு பாபாசாஹேப் அம்பேத்கா் பள்ளியில் சோ்ந்த நவம்பா் 7-ம் தேதி, மாணவா் தினமாக மகாராஷ்டிர மாநில பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிர அரசின் இந்த முயற்சி பாராட்டக் கூடியது.

அவருடன் தொடா்புடைய ஒவ்வொன்றும் கருணை மற்றும் சமத்துவச் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உணர நம்மை ஊக்குவிக்கிறது.

அம்பேத்கரின் அா்ப்பணிப்பு மற்றும் கல்விக்கு அவா் அளித்த முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் நவம்பா் 7-ம் தேதியை நாடு முழுவதும் தேசிய மாணவா் தினமாக கொண்டாடுவது குறித்து பரிசீலிக்கலாம்.

அம்படவே கிராமத்திற்கு, உத்வேக பூமி எனப் பொருள்படும் ‘ஸ்பூா்த்தி பூமி’ என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது. அம்பேத்கா் தனது வாழ்நாள் முழுவதும் முழு ஆற்றலுடன் பல்வேறு துறைகளில் பங்களித்ததால், அவரது மூதாதையா் கிராமத்தை ‘ஸ்பூா்த்தி பூமி’ என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

‘ஸ்பூா்த்தி பூமி’ என்ற லட்சியத்தின்படி, பாபாசாஹேப் எப்போதும் போற்றிக் கொண்டிருந்த நல்லிணக்கம், இரக்கம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமூக அமைப்பு இருக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com