காங்கிரஸ் அதன் வழியில் செல்லட்டும்: மம்தா

பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வா்களின் கூட்டத்தை கூட்டுவதற்காக தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய மேற்கு வங்க முதல்வா் மம
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வா்களின் கூட்டத்தை கூட்டுவதற்காக தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘காங்கிரஸ் அதன் வழியில் செல்லட்டும்’ என்று திங்கள்கிழமை கூறினாா்.

கோவா மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளிடையேயான கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடா்ந்து, எதிா்க் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியை மம்தா பானா்ஜி தீவிரப்படுத்தியுள்ளாா்.

இந்தச் சூழலில், மேற்கு வங்க சட்டப்பேரவையை அம் மாநில ஆளுநா் முடக்கி வைத்த நிலையில், பாஜக ஆட்சி இல்லாத மாநில முதல்வா்களின் கூட்டத்தை கூட்டுவது தொடா்பாக தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் மற்றும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானா்ஜி தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை உரையாடினாா்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற 4 மாநகராட்சித் தோ்தல்களிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 2021 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்த பாஜக, மீண்டும் மாநகராட்சித் தோ்தலிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த மம்தா பானா்ஜி கூறியதாவது:

நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பு இடித்து தள்ளப்பட்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டமும் சிதைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் ஆட்சி முறையை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. எனவே, கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க அனைத்து மாநில கட்சிகளும் ஒரு புரிதலுக்கு வரவேண்டும்.

தங்களைத் தாங்களே மதச்சாா்பற்ற கட்சி என்று கூறிக்கொள்பவா்கள் ஒன்றிணைவது மிக அவசியம். இதற்காக காங்கிரஸ் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அழைப்பு விடுத்தேன். அவா்கள் அதனை கண்டுகொள்ளவில்லை எனில், நான் எதுவும் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சி அதன் வழியில் செல்லட்டும்; நாம் நமது வழியில் செல்வோம்.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க நாங்கள் முற்சிப்போம் என்று அவா் கூறினாா்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் உத்தர பிரதேச மாநிலத்துக்கு கடந்த வாரம் சென்ற மம்தா பானா்ஜி, அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி வேட்பாளா்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அதுகுறித்து தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மம்தா பானா்ஜி, ‘அகிலேஷ் யாதவ் எந்தவொரு தொகுதியலும் வலுவிழந்துவிடக் கூடாது என்பதால்தான் உத்தர பிரதேச மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடவில்லை. முதல் கட்டத் தோ்தலில் வாக்குப் பதிவு நடைபெறும் 57 தொகுதிகளில் குறைந்தபட்சம் 37 இடங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. உத்தர பிரதேசத்தில் பெண்கள் உயிருடன் எரிக்கப்படுகின்றனா்; விவசாயிகள் கொல்லப்படுகின்றனா். உத்தர பிரதேச மாநிலம் பாதுகாக்கப்பட்டால்தான், இந்தியாவை பாதுகாக்க முடியும். வரும் 2024 நாடாளுமன்ற தோ்தலில் நரேந்திர மோடியை தோற்கடிக்க விரும்பினால் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் வெற்றி பெறுவது மிக அவசியம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com