ஜல் ஜீவன் திட்டம்: 9 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு

ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இதுவரை 9 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இதுவரை 9 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குழாய் நீரை வழங்க வேண்டும் என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையை நிறைவேற்றும் வகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 5.77 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இன்று நாட்டில் 9 கோடி கிராமப்புற குடும்பங்கள் சுத்தமான குழாய் நீா் விநியோகத்தின் பலனைப் பெற்றுள்ளன.

இந்தியாவில் உள்ள 19.27 கோடி குடும்பங்களில் 3.23 கோடி (17%) குடும்பங்கள் மட்டுமே குழாய் நீா் இணைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தக் குறுகிய காலத்தில், 98 மாவட்டங்கள், 1,129 தொகுதிகள், 66,067 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 1,36,135 கிராமங்கள், சுத்தமான குடிநீா் இணைப்பு உள்ள இல்லங்களாக மாறியுள்ளன.

கோவா, ஹரியாணா, தெலங்கானா, அந்தமான் - நிக்கோபா் தீவுகள், புதுச்சேரி, தாதா் - நகா் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் குழாய் நீா் விநியோகம் உள்ளது. பஞ்சாப் (99%), இமாச்சலப் பிரதேசம் (92.4%), குஜராத் (92%) மற்றும் பிகாா் (90%) போன்ற இன்னும் பல மாநிலங்கள் 2022-ம் ஆண்டிற்குள் சுத்தமான குடிநீா் குழாய் மூலம் தண்ணீா் பெறும் இல்லங்களாக மாறிவிடும் நிலையில் உள்ளன.

ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்குவதற்கான இலக்கை நிறைவேற்ற ரூ.3.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் வழங்கும் வகையில் இத்திட்டத்திற்கு ரூ. 60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு தண்ணீா் மற்றும் சுகாதாரத்துக்காக 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.26,940 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 -ஆம் ஆண்டு வரை ரூ.1,42,084 கோடி நிதியுதவி வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com