யார் அந்த மர்ம சாமியார்? விஸ்வரூபம் எடுக்கும் சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம்

தேசிய பங்குச் சந்தையின் தலைமை அதிகாரியாக இருந்த போது கூட இந்த அளவுக்கு பேசப்படாத சித்ரா ராமகிருஷ்ணா, இன்று தலைப்புச் செய்தியாகியுள்ளார்.
விஸ்வரூபம் எடுத்திருக்கும் சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம்
விஸ்வரூபம் எடுத்திருக்கும் சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம்


புது தில்லி: தேசிய பங்குச் சந்தையின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த போது கூட இந்த அளவுக்கு பேசப்படாத சித்ரா ராமகிருஷ்ணா, இன்று தலைப்புச் செய்தியாகியுள்ளார்.

காரணம்.. குற்றச்சாட்டு, இவர் மீது விசாரணை நடத்த மத்திய அரசு எந்த நேரத்திலும் உத்தரவிடலாம் என்று கூறப்படுகிறது.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண்மை இயக்குநரும், முதன்மை  செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா, பொறுப்பில் இருந்த போது, தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக செயல்பாடுகள்  தொடர்பான முக்கிய ரகசியங்களை இமயமலையிலிருப்பதாகக் கூறப்படும் சாமியார் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'சித்த புருஷ்' என்று சித்ராவால் கூறப்படும் அந்த சாமியார், இமயமலையில் இருப்பதாகவும், தான் அவரை நேரில் சந்திப்பதில்லை, மின்னஞ்சல் வாயிலாகவே தொடர்புகொள்வேன் எனவும் கூறுகிறார்.

பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, தேசிய பங்குச் சந்தையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடத்திய விசாரணையின்போது, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கும், மர்ம சாமியாருக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிவர்த்தனைகளை ஆராய்ந்த போதுதான் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.

எர்ன்ஸ் அண்ட் யங்க நிறுவனம், தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் சித்ரா ராமகிருஷ்ணா பயன்படுத்திய கணினியை தடயவியல் ஆய்வு செய்ததில், சித்த புருஷ் என்றழைக்கப்படும் சாமியார், அவருக்கு சொந்த விவகாரங்களில் ஆலோசனை வழங்கியிருப்பதும், தேசிய பங்குச் சந்தையில் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள், நிதித் தொடர்பான முக்கிய முடிவுகள், திட்டங்கள் அனைத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, கங்கை நதிக்கரையில், அந்த சித்த புருஷ் எனப்படும் சாமியாரை, சித்ரா ராமகிருஷ்ணா சந்தித்ததாகவும், அதன்பிறகு, சொந்த வாழ்க்கையிலும், பணி நிமித்தமான முக்கிய முடிவுகளையும் அவரிடம் கலந்தாலோசனை செய்தே எடுத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

"அவருக்கிருக்கும் ஆன்மிக சக்தி காரணமாக, எங்களுக்குள் நேரடியான சந்திப்புகள் தேவையற்றதாக இருந்தது, அதுபோலவே, அவரது விருப்பப்படியே அவர் வெளியில் தோன்றுவார், அவரது இருப்பிடம் குறித்த எந்த தகவல்களும் என்னிடமில்லை, அவரது வழிகாட்டுதல்கள் எனக்குத் தேவைப்படும் போது, அவரைத் தொடர்பு கொள்ளும் வழிமுறைகளை அவரிடம்  கேட்டேன்,  அதற்காக, அவர் எனக்கு இந்த மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைத்தார்" என்று சித்ரா ராமகிருஷ்ணா கூறியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் செபி அதிகாரிகள், சித்ரா ராமகிருஷ்ணா அளிக்கும் 'சித்த புருஷ்' கதையை புறந்தள்ளுவதோடு, முதற்கட்ட விசாரணையில் கிடைத்திருக்கும் மின்னஞ்சல் தகவல்களின் அடிப்படையில், அவர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதையே கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. மற்றும் நாட்டின் நிதித்துறை பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தலையிட்டு, ஆலோசனை அளித்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்த தகவல்களை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

அது மட்டுமல்ல, சித்ரா ராமகிருஷ்ணா பயன்படுத்திய மடிக்கணினியை எந்த ஆய்வும் செய்யாமல், அப்புறப்படுத்த தேசிய பங்குச் சந்தை நிர்வாகம் அவசரம் காட்டியது ஏன் என்றும் எதிர்கால விசாரணைகளுக்குத் தேவைப்படும் என்று கருதாமல், அவர் பயன்படுத்திய கணினியை பாதுகாக்க வேண்டாம் என்று முடிவெடுத்தது யார் எனவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கும் மர்ம சாமியாருக்கும் இடையே நடக்கும் மின்னஞ்சல் பரிமாற்றம் தொடர்பான முழுத் தகவல்களும் தேசிய பங்குச் சந்தை நிர்வாகம் அறிந்திருந்தும் கூட, அவர் பதவியை ராஜிநாமா செய்யவும், மரியாதையான முறையில் அவர் தேசிய பங்குச் சந்தையிலிருந்து விலகவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கவும் என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தவும் அவசியம் உள்ளது என்கிறது தகவலறிந்த வட்டாரங்கள்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய செபியின் முழு நேர உறுப்பினர் அனந்த பருவா பிப்ரவரி 11ஆம் தேதி தாக்கல் செய்த இறுதி அறிக்கையின் 123ஆவது பக்கத்தில், எர்ன்ஸ் அன்ட் யங் நிறுவனம் அளித்த அறிக்கையில், சித்ரா ராமகிருஷ்ணா பயன்படுத்திய கணினி மற்றும் இதர 6 கணினிகள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆனால், சித்ரா ராமகிருஷ்ணா பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் இதர 6 மடிக்கணினிகளும் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை, அவை மின் கழிவுகளாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை மட்டுமே இதில் பரிசோதிக்க முடிந்தது என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலிலிருந்து மின்னஞ்சல் அனுப்பியது, பெறப்பட்டது தொடர்பான தகவல்களை, அவர்களைத் தவிர வேறு யாரும் பரிசோதிக்க முடியாத வகையில் உள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தான் rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறும் மர்ம சாமியார், மனிதர்களைப் போல வெளியில் தோன்றமாட்டார், அவரை ஆன்மிக அனுபவத்தில் உணரவே முடியும் என்று குறிப்பிடுகிறார்.  ஆனால், செபி நடத்திய விசாரணை அறிக்கையில்,  மின்னஞ்சல்கள் வாயிலாக கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், அவர் ஒரு மனிதர்தான். அவரை, சித்ரா ராமகிருஷ்ணா சந்தித்துள்ளார். ஆனால், அவர், மர்ம சாமியார் குறித்த தகவல்களை தெரிவிக்க மறுக்கிறார் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செபியின் விசாரணை அறிக்கை, இவ்வாறு நிறைவடைகிறது.. "சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்குச் சந்தையின் முக்கிய நிதி செயல்பாடு, வணிகத் திட்டங்கள் தொடர்பான அனைத்து ரகசியத் தகவல்களையும் மர்ம சாமியாரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார், மற்றும் இதனால், பங்குச் சந்தைக்கு எந்த விதமான பாதிப்போ, இழப்போ அல்லது நீதிதவறவோ இல்லை என்றும் தான் கருதுவதாகக் கூறுவது கவனிக்கத்தக்கது மற்றும் கேள்விக்குரியது. பங்குச் சந்தையானது போட்டிகள் நிறைந்த மற்றும் பங்குப் பரிவர்த்தனைக்குரியது என்பதால் பாதுகாக்கப்பட வேண்டியது. அதோடு, லாபமீட்டும் நிறுவனங்கள், தொடர்ந்து லாபமீட்டுவதற்காக, இதர நிறுவனங்களுடன் போட்டியிலிருப்பவை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் நிதி மற்றும் வணிக திட்டங்கள் குறித்த தகவல்களை, அதன் மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை அதிகாரி, யாரென்றே தெரியாத நபருடன் பகிர்ந்து கொண்டிருக்கும் அதிர்ச்சிக்குரிய செயல், பங்கு வர்த்தகத்தின் அடிப்படையையே ஆட்டுவிக்கும் வகையில் அமைந்துவிட்டது. தேசியப் பங்குச் சந்தை தொடர்பான மிகவும் ரகசியம்காக்கப்பட வேண்டிய, மிக முக்கிய தகவல்களை, சித்ரா ராமகிருஷ்ணா, தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வாயிலாக வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால், எப்படிப்பட்ட ரகசியம்காக்கப்பட வேண்டிய தகவல்கள் பகிரப்பட்டிருக்கிறது என்பதை ஒருவரால் இங்கு நிச்சயம் புரிந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மர்ம சாமியாரின் அருள் பெற்ற தேசியப் பங்குச் சந்தை ஊழியர்

கண்ணுக்குத் தெரியாத அல்லது மனிதரல்லாதவர் என்று கூறப்படும், சித்ரா ராமகிருஷ்ணாவால் ஆன்மிகக் குருவாகக் கருதப்படும் அந்த மர்ம சாமியார், தேசியப் பங்குச் சந்தையில் பணியாற்றிய முதன்மை இயக்க முன்னாள் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனுக்கு அதிக அருளை வழங்கியுள்ளார்.

பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி நடத்திய விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கும் மர்ம சாமியாருக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிவர்த்தனை  ஒன்றில், முதன்மை இயக்க அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சுப்ரமணியன் என்பவரின் பணியாளர் ஒப்பந்த ஊதியத்தை அதிகரிக்குமாறு 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

இந்த மின்னஞ்சலின் அடிப்படையில், சுப்பிரமணியன் பணியில் சேர்ந்த போது 2013 ஜனவரியில் ஊதியம் 1.68 கோடியிலிருந்து அவர், பணியிலிருந்து வெளியேறிய 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் 4.21 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபராக அறியப்படும் சுப்பிரமணியனுக்கு, விதிகளை மீறி, மிக அதிக ஊதிய உயர்வு செய்யப்பட்டிருப்பதாக செபி தெரிவிக்கிறது.

இதற்காக மர்ம சாமியாருக்கு நன்றி செலுத்தும் வகையில், தனக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறும் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இதில் மிகவும் அதிர்ச்சிதரும் விஷயம் என்னவென்றால், மின்னஞ்சலைத்தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 சதவீதமும், 2 மாதங்களுக்குப் பிறகு 15 சதவீதமும், 2015ஆம் ஆண்டும் மார்ச் மாதத்தில் 15 சதவீதமும், ஏப்ரலில் 10 சதவீதமும் ஊதிய உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சுப்ரமணியன், குழுமத்தின் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநரின் ஆலோசகராக பதவி உயர்வும் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com