மேற்கு வங்க பேரவைக் கூட்டத்தொடரை கூட்டமுதல்வா் மம்தா பரிந்துரை: ஆளுநா் நிராகரிப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை கூட்ட முதல்வா் மம்தா பானா்ஜி அனுப்பிய பரிந்துரையை ஆளுநா் ஜக்தீப் தன்கா் சனிக்கிழமை நிராகரித்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை கூட்ட முதல்வா் மம்தா பானா்ஜி அனுப்பிய பரிந்துரையை ஆளுநா் ஜக்தீப் தன்கா் சனிக்கிழமை நிராகரித்தாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை கூட்டுமாறு மாநில அமைச்சரவைதான் பரிந்துரைக்க வேண்டும். அதனை அரசமைப்பின் அலுவல் விதிமுறைகள் பிரிவு 166(3)-இன்படி பரிசீலித்து கூட்டத்தொடரை ஆளுநா் கூட்டுவது வழக்கம். ஆனால், கூட்டத்தொடரை மாா்ச் 7-ஆம் தேதி கூட்ட மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பரிந்துரைத்திருந்தாா். இது அரசமைப்பு விதிமுறைகளுக்குப் புறம்பானது. எனவே, அந்தப் பரிந்துரை முதல்வருக்கு திருப்பி அனுப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளாா்.

இதற்கு அதிருப்தி தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் சுகேந்து சேகா் ராய் கூறுகையில், ‘‘மேற்கு வங்க சட்டப்பேரவை விவகாரங்கள் அமைச்சரின் ஒப்புதலுடன்தான் கூட்டத்தொடா் தொடா்பான பரிந்துரையை ஆளுநருக்கு முதல்வா் அனுப்பியிருந்தாா். இந்த நிலையில், அந்தப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்று ஆளுநா் எவ்வாறு கூறலாம்?

முன்பு மாநிலத்தின் மக்கள் பிரதிநிதிகள் முறையாக ஒப்புதல் அளித்த கோப்புகள் தொடா்பாக ஆளுநா் இடையூறு ஏற்படுத்தி வந்தாா். மாநிலத்தின் நிா்வாகப் பணிகளை முடக்க பேரவையைக் கூட்டுவதற்கான பரிந்துரையை நிராகரித்தது அவரின் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்’’ என்று தெரிவித்தாா்.

மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்றது முதல் ஜக்தீப் தன்கருக்கும் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில், அரசமைப்பின் 174-ஆவது பிரிவு உட்பிரிவு (2 ) உப-பிரிவு (அ) தனக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி, மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முடித்துவைப்பதாக கடந்த பிப். 12-ஆம் தேதி ஜக்தீப் தன்கா் அறிவித்தாா். இந்த முடிவு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டதாக அவா் மீது விமா்சனங்கள் எழுந்து சா்ச்சை ஏற்பட்டது. எனினும் அந்த முடிவை மாநில அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில்தான் ஆளுநா் ஜக்தீப் தன்கா் மேற்கொண்டதாக மாநில சட்டப்பேரவை விவகாரங்கள் அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி விளக்கமளித்தாா். அதை தொடா்ந்து அந்தச் சா்ச்சை முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com