அந்த இமயமலை சாமியார் யார்? கசிந்தது ரகசியத் தகவல்

சித்ரா ராமகிருஷ்ணாவால், இமயமலை பாபா என்று கூறப்படும் அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பதை மட்டும் இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை.
அந்த இமயமலை சாமியார் யார்? கசிந்தது ரகசியத் தகவல்
அந்த இமயமலை சாமியார் யார்? கசிந்தது ரகசியத் தகவல்


புது தில்லி: முறைகேடு புகாருக்குள்ளாகியிருக்கும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஆனால், சித்ரா ராமகிருஷ்ணாவால், இமயமலை பாபா என்று கூறப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தகச் சந்தையில், கோலோச்சி வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பதை மட்டும் அவர்களால் இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஆனால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு, மிக முக்கிய இடத்திலிருந்து வந்த ரகசியத் தகவல் சொல்வது என்னவென்றால், உண்மையிலேயே இவர் பாபா எல்லாம் இல்லை, அவர் இமயமலையில் எதுவும் செய்து கொண்டிருக்கவில்லை. அவர் இந்த நாட்டின் வேறு ஏதேனும் ஒரு மூலையில் இருக்கலாம். அவர் மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் மூத்த அதிகாரியாக, மூலதனச் சந்தையில் முக்கியப் பொறுப்பை வகித்து, சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்குச் சந்தையில் மிக முக்கியப் பதவியை பிடிக்க வழிகாட்டியவராகக் கூட இருக்கலாம் என்கிறது.

அதேவேளையில், என்எஸ்இ முன்னாள் நிர்வாக அதிகாரி ஆனந்த் சுப்ரமணியம், ஏன் அந்த இமயமலை பாபாவாக இருக்கக் கூடாது என்ற சந்தேகத்தை முற்றிலும் புறந்தள்ளுகிறது அந்த தவலறிந்த வட்டாரம். மேலும், இந்த முறைகேட்டு விவகாரத்தில், சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியம் ஆகியோருடன் முடித்துவிட வேண்டும் என்று சிலர் முற்படுகிறார்கள். 

ஒருவேளை பலரும் சந்தேகிப்பது போல, ஆனந்த் சுப்ரமணியமே இமயமலை பாபா என்று உறுதி செய்யப்பட்டுவிட்டால், தேசிய பங்குச்சந்தை தொடர்பான மிக ரகசியமான தகவல்களை வெளி நபர்களுக்குப் பகிரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இல்லாமலேயே போய்விடும். இதனால்தான், அந்த பாபா என்பது ஆனந்த் சுப்பிரமணியம் என்பதுபோன்ற கட்டுக்கதைகள் உருவாக்கப்படுகிறது.

எனினும், விரிவான விசாரணை மேற்கொண்ட செபி, இந்த சித்தாந்தத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டது. அதுமட்டுமல்ல, செபியின் விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்குச் சந்தையின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, மின்னஞ்சல் வாயிலாக, யாரென்று தெரியாத ஒரு நபரிடம் பகிர்ந்து கொண்டு வரும் விவகாரம் தேசிய பங்குச் சந்தை வாரியத்துக்கு நன்கு தெரியும். இந்த வாரியம்தான், சித்ரா ராமகிருஷ்ணா, பதவியிலிருந்து விலகவும், அவரை எந்த இடையூறும் இல்லாமல் தேசிய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயாமல் இருக்கவும் முழு அனுமதி அளித்தது. அது மட்டுமல்ல, சித்ரா ராமகிருஷ்ணாவின் சேவைக்காக, இந்த தேசிய பங்குச் சந்தை வாரியம் உரிய முறையில் நன்றியும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கில், விசாரணை வளையத்தை பெரிதாக்கி, தேசிய பங்குச் சந்தை வாரிய உறுப்பினர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று அந்த தகவலறிந்த வட்டாரம் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

ஒரு வேளை, இந்த வழக்கில் சிபிஐ மிகத் தீவிரமாக இறங்கினால், தன்னை பாபா என்று அடையாளம் காட்டிக் கொள்ளும் அந்த நபர் வெளிச்சத்துக்கு வருவார். ஆனால், இதனை தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தகவல்களை சேமித்து வைக்கும் ‘கோ லொகேஷன்’ எனப்படும் ‘சா்வரை’ விதிகளை மீறி பயன்படுத்தியது தொடா்பான விசாரணையாகவே கொண்டு சென்றால், இமயமலை சாமியார் தொடர்ந்து மர்ம சாமியாராகவே நீடிப்பார் என்றும் அந்த தகவலறிந்த வட்டாரம் கவலை தெரிவிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com