கர்நாடகம்: மேக்கேதாட்டு நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது

கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் மேக்கேதாட்டு நடைப்பயணம் நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவா்கள் பங்கேற்றனர்.
கர்நாடகம்: மேக்கேதாட்டு நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது

கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் மேக்கேதாட்டு நடைப்பயணம் நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவா்கள் பங்கேற்றனர்.

பெங்களூருக்கு குடிநீா் வழங்குவதற்காக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட வலியுறுத்தி, ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் உள்ள மேக்கேதாட்டு பகுதியில் இருந்து ஜன. 9-ஆம் தேதி ‘நமது நீா், நமது உரிமை’ என்ற முழக்கத்துடன் ‘நீருக்காக நடைப்பயணம்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியது.

 கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தடையை மீறி நடைபெற்ற நடைப்பயணத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

இந்த நடைப்பயணம், ராமநகரம் வழியாக 165 கி.மீ. தொலைவைக் கடந்து ஜன. 19-ஆம் தேதி பெங்களூரை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா விதிமீறலில் ஈடுபட்டதாக நடைப்பயணத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, டி.கே.சிவகுமாா், சித்தராமையா உள்ளிட்ட தலைவா்கள் மீது 4 வழக்குகள் தொடரப்பட்டன.

இதனிடையே, நடைப்பயணத்திற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, 5 நாள்கள் நடந்த மேக்கேதாட்டு நடைப்பயணத்தை ஜன. 13-ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்துவதாக காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில், மேக்கேதாட்டு நடைப்பயணத்தை நேற்று முதல் காங்கிரஸ் மீண்டும் தொடங்கியது. 

காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமார், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தனர். மேலும் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, ஹரிபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிடதி இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், மாா்ச் 3-ஆம் தேதி பெங்களூரில் நிறைவடைகிறது.

 பெங்களூரு, பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் மாா்ச் 3-ஆம் தேதி நிறைவு பொதுக் கூட்டம் நடக்க இருக்கிறது. மாா்ச் 2, 3-ஆம் தேதிகளில் பெங்களூரின் முக்கிய பகுதிகள் வழியாக பயணிக்கும் நடைப்பயணம் பசவனகுடியில் நிறைவடைவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com