
‘இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் 100 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன; இதுவே தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றை எடுத்துரைக்கும் சான்றாக விளங்குகிறது’ என்று சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஓராண்டாக அந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தத் தடுப்பூசியை சந்தை விற்பனைக்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) சீரம் நிறுவனம் கடந்த அக்டோபரில் விண்ணப்பித்திருந்தது. அதன் பிறகு அந்த நிறுவனத்திடம் கூடுதல் விவரங்களை டிசிஜிஐ கடந்த டிசம்பரில் கேட்டிருந்தது.
அதற்கு சீரம் நிறுவனத்தின் அரசு விவகாரங்கள் பிரிவின் இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங், டிசிஜிஐக்கு கூடுதல் விவரங்களுடன் அண்மையில் அறிக்கைத் தாக்கல் செய்தாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி மீது நடத்தப்பட்ட 3 கட்ட மருத்துவ ஆய்வுகளில் 2 கட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இந்தியாவிலும் உலக அளவிலும் இதுவரை 100 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பெருமளவில் கோவிஷீல்ட் செலுத்தப்பட்டதால் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே, கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல் திறன், பாதுகாப்பு ஆகியவற்றுக்குச் சான்றாக உள்ளன.
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்’ என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.