பாதுகாப்பு குளறுபடி: பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பஞ்சாபில் பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி தில்லியில் இருந்து புதன்கிழமை காலை பஞ்சாப் மாநிலம், பதிண்டா விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. வானிலை சீரடைவதற்கு 20 நிமிஷங்கள் காத்திருந்தார்.

பின்னா், சாலை வழியாகவே தேசிய தியாகிகள் நினைவிடம் செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாகச் செல்வதற்கு 2 மணி நேரமாகும். சாலைவழிப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு காவல் துறை டிஜிபியிடம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அவா் உறுதிசெய்த பிறகு பிரதமா் மோடி பயணத்தைத் தொடா்ந்தார்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்திருப்பது தெரியவந்தது. அவா்களின் மறியலால் மேம்பாலத்திலேயே அவா் 15-20 நிமிஷங்கள் காக்க வைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடி பதிண்டா விமான நிலையத்துக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல முடியாதது மட்டுமன்றி, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமரால் பங்கேற்க முடியவில்லை. 

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம், "பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல், அனைத்து பயண பதிவுகளையும் தனது பாதுகாப்பில் வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார், மேலும் பஞ்சாப் காவல்துறை, சிறப்பு பாதுகாப்பு குழு (என்பிஜி) மற்றும் பிற மத்திய மற்றும் மாநில அமைப்புகள் அவருக்கு ஒத்துழைத்து மற்றும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், "இது போன்று பாதுகாப்பு குளறுபடி ஏற்படுவது அரிதினும் அரிதான ஒன்று. இதனால் சர்வதேச அளவில் நமக்கு ஏற்படலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இச்சம்பவம் பிரதமரின் பாதுகாப்புக்கு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியது. பிரதமரின் பஞ்சாப் பயண மற்றும் பாதுகாப்பு ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட வேண்டும்.

பஞ்சாப் அரசும், காவல்துறையும்தான் பாதுகாப்புக் குறைபாட்டிற்குக் காரணம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடக்க வாய்ப்புள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, இது சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com