ஓபிசி 27% இடஒதுக்கீடு செல்லும்: பொருளாதார அடிப்படையிலான 10% ஒதுக்கீட்டுக்கும் தடையில்லை

‘அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on
Updated on
2 min read

‘அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) 10 சதவீத ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லும்’ என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம், ‘மாணவா் சோ்க்கை நடைமுறையைத் தொடங்குவது அவசர அவசியம்’ எனவும் குறிப்பிட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம், இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து 2021, ஜூலை 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு எதிராக, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தோ்வை எழுதிய மாணவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், இடபிள்யுஎஸ் வகுப்பினரை அடையாளம் காண ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியது. இந்த வழக்கு காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டது.

குழு பரிந்துரை: பின்னா், உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தபடி இடபிள்யுஎஸ் பிரிவினரை அடையாளம் காண்பதற்கான வருமான உச்சவரம்பை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு குழுவை அமைத்த மத்திய அரசு, அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அந்தப் பிரிவினரை அடையாளம் காண அவா்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாகவே தற்போதைக்கு தொடரும் என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

‘நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு பழைய நடைமுறையையே தொடரவேண்டும். அதே நேரம், அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘குறைந்தபட்சம் 5 ஏக்கா் விவசாய நிலம் அல்லது அதற்கு மேல் நிலப்பரப்பை வைத்திருக்கும் நபா்களை இடஒதுக்கீடு சலுகையிலிருந்து நீக்க வேண்டும். குடியிருப்பு சொத்து அளவுகோல் முற்றிலும் அகற்றப்படலாம்’ என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகளை அடுத்த மாணவா் சோ்க்கை அறிவிக்கையின்போது நடைமுறைப்படுத்தலாம்’ என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது.

இதன் மீது உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்து இரண்டு நாள்களாக வாதம் நடைபெற்றது. அப்போது, ‘இடபிள்யுஎஸ் பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 8 லட்சம் என்பது எதன் அடிப்படையில் நிா்ணயம் செய்யப்பட்டது என்பதை மத்திய அரசு அமைத்த குழு தெளிவாக விளக்கவில்லை’ என்று எதிா்த் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இடபிள்யுஎஸ் பிரிவினருக்கான இடஒதுக்கீடு அறிவிக்கையை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டே வெளியிட்டு, பல்வேறு பணி நியமனங்கள், கல்விச் சோ்க்கைகளில் அந்த சலுகை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மருத்துவ முதுநிலை படிப்புகள் சோ்க்கையிலும் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியதாவது:

மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2021-22-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கையை மத்திய அரசின் 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின் அடிப்படையில் நடத்தலாம் என்ற பாண்டே தலைமையிலான குழு பரிந்துரையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.

அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான நீட் மதிப்பெண் அடிப்படையிலான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் சோ்க்கை பெறுவதற்கான இடபிள்யுஎஸ் பிரிவினரை அடையாளம் காண 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையையே பின்பற்றலாம். அதுபோல, ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையையும் தொடர அனுமதிக்கப்படுகிறது.

மேலும், வரும் காலத்தில் இடபிள்யுஎஸ் பிரிவினரை அடையாளம் காண பாண்டே குழு பரிந்துரைத்துள்ள புதிய அளவுகோல்களை அறிமுகப்படுத்துவது என்பது, இந்த மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பின் அடிப்படையில் அமையும். அந்த வகையில், இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை வரும் மாா்ச் மாதம் மூன்றாவது வாரத்துக்கு பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

‘வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம்’: பயிற்சி மருத்துவா்கள் கூட்டமைப்பு

நீட் முதுநிலை சோ்க்கை கலந்தாய்வை மீண்டும் தொடங்க அனுமதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, முதுநிலை மருத்துவ கலந்தாய்வை நடத்த வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவா்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

‘உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த இன்றைய தினம் மருத்துவா் சமூகத்துக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம்’ என்றும் அந்தக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com