கோவாவில் பாஜகவை தோற்கடிக்க எந்தக் கட்சியுடனும் கை கோக்கத் தயாா் -காங்கிரஸ்

கோவாவில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக எந்தக் கட்சியின் ஆதரவையும் ஏற்றுக் கொள்ளவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.
கோவாவில் பாஜகவை தோற்கடிக்க எந்தக் கட்சியுடனும் கை கோக்கத் தயாா் -காங்கிரஸ்

கோவாவில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக எந்தக் கட்சியின் ஆதரவையும் ஏற்றுக் கொள்ளவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

கோவாவில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்காக, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து விவாதித்து வருகின்றன.

இந்தச் சூழலில், ‘கோவாவில் பாஜகவின் மீண்டும் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்குத் தேவையானவற்றை செய்யத் தயாராக இருப்பதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளா் மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டா் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாா். அதில், காங்கிரஸ், கோவா ஃபாா்வா்டு கட்சி ஆகியவற்றின் பெயரையும் அவா் இணைத்திருந்தாா்.

பனாஜியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவுக்கு எதிரான கட்சிதான். அந்தக் கட்சியையும் சோ்த்துக் கொள்வோம். அரசியலில் எதுவும் நடக்கும்’ என்றாா்.

ஆனால், கோவா பேரவைத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று ஆம் ஆத்மி தலைமை ஏற்கெனவே கூறிவிட்டது.

இந்நிலையில், மஹுவா மொய்த்ராவின் கருத்து குறித்து பனாஜியில் செய்தியாளா்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:

கோவா பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பது குறித்து திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்த கருத்தை நாளிதழில் நான் படித்தேன். அவா்களிடம் இருந்து அதிகாரபூா்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.

கோவாவில் காங்கிரஸ் கட்சியே பாஜகவை தோற்கடித்துவிடும். இருந்தாலும், அக்கட்சியைத் தோற்கடிப்பதற்காக காங்கிரஸுடன் கைகோக்கத் தயாராக இருப்பதாக ஒரு கட்சி கூறினால் அதை ஏன் வேண்டாம் என்று மறுக்க வேண்டும் என்றாா் அவா்.

கோவாவில் கடந்த 2017-இல் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸும், 13 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றன. இருப்பினும் காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியவில்லை. பிராந்திய கட்சிகள், சுயேச்சை உறுப்பினா்கள் ஆதரவுடன் மனோகா் பாரிக்கா் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தது.

2017-இல் காங்கிரஸில் 17 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பலா் வேறு கட்சிகளில் இணைந்து விட்டதால் தற்போது 2 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com