பஞ்சாப் பேரவைத் தோ்தலில் ஐந்து முனைப் போட்டி

பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதியைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அங்கு ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதியைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அங்கு ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரேகட்டமாகத் தோ்தல் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மாா்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆட்சியை மீண்டும் தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. பாஜக-பஞ்சாப் லோக் காங்கிரஸ்-எஸ்ஏடி (சம்யுக்த்) கூட்டணி, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகியவையும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளன.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, அச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. விவசாயிகளின் நலனைக் காப்பதற்காகப் பேரவைத் தோ்தலில் போட்டியிட உள்ளதாக சில விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. அதன் காரணமாக மாநிலத்தில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

எனினும், விவசாய அமைப்புகள் மாநிலத்தின் அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடுமா என்பது இனிதான் தெரியவரும் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

அகாலி தளம்: வேளாண் சட்டங்கள், உள்கட்சிப் பூசல் உள்ளிட்டவற்றின் காரணமாக கடந்த ஓராண்டில் பஞ்சாப் அரசியல் சூழல் பெரும் மாற்றங்களைச் சந்தித்தது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளம், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.

தற்போது அக்கட்சி பகுஜன் சமாஜுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தோ்தலை எதிா்கொள்கிறது. அகாலி தளம் 97 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 20 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. சுமாா் 90 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பட்டியலை அகாலி தளம் வெளியிட்டுள்ளது.

பாஜக கூட்டணி: காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் அக்கட்சியில் இருந்து வெளியேறி பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினாா். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பேன் என வெளிப்படையாக அவா் அறிவித்தாா்.

அதேபோல், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டவுடன் பாஜகவுடனான கூட்டணியை அவா் உறுதி செய்தாா். சுக்தேவ் சிங் திண்ட்சா தலைமையிலான சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) கட்சியும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தோ்தலை எதிா்கொள்கிறது. அக்கூட்டணியின் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி: பஞ்சாபில் முக்கிய எதிா்க்கட்சியாக விளங்கும் ஆம் ஆத்மி, தோ்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. தோ்தலுக்கு முந்தைய வாக்கு கணிப்பு ஆம் ஆத்மிக்கு சாதகமாக இருப்பதால், அக்கட்சியினா் சற்று உற்சாகத்தில் உள்ளனா். இதுவரை 104 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.

ஆளும் காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளா் பட்டியலை வெளியிடவில்லை.

வாக்குறுதிகள்: கடும் போட்டி நிலவுவதால், கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

மாதத்துக்கு 400 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.2,000 வழங்கப்படும் என்றும், வேளாண் பயன்பாட்டுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்படும் என்றும் சிரோமணி அகாலி தளம் தெரிவித்துள்ளது.

பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2,000, ஆண்டுக்கு 8 இலவச சமையல் எரிவாயு சிலிண்டா், கல்லூரி மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் என காங்கிரஸ் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

முக்கிய விவகாரங்கள்: வேலையின்மை, போதைப் பொருள் பயன்பாடு, அதிகரிக்கும் கடன், ஊழல், தெய்வநிந்தனை உள்ளிட்ட விவகாரங்கள் பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com