உரிமம் புதுப்பிப்பு:தெரஸா அறக்கட்டளை மீண்டும்வெளிநாட்டு நன்கொடை பெற அனுமதி

கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரஸா அறக்கட்டளையான ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ மீண்டும் வெளிநாட்டு நன்கொடை பெறும் வகையில் எஃப்சிஆா்ஏ உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் புதுப்பித்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு

கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரஸா அறக்கட்டளையான ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ மீண்டும் வெளிநாட்டு நன்கொடை பெறும் வகையில் எஃப்சிஆா்ஏ உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் புதுப்பித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் எஃப்சிஆா்ஏ உரிமம் புதுப்பிக்கப்பட்டிருப்பதன் மூலம், அந்த அறக்கட்டளை இனிமேல் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறலாம்; வங்கிகளில் உள்ள பணத்தையும் செலவு செய்யலாம்’ என்றாா்.

இதுகுறித்து மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பு அதிகாரபூா்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இருப்பினும், அந்த அமைப்பின் மூத்த அலுவலா் ஒருவா், சாரிட்டியின் உரிமம் ஜன. 7-ஆம் தேதி புதுப்பிக்கப்பட்டதாகக் கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘எஃப்சிஆா்ஏ உரிமம் புதுப்பிக்கப்படாத நிலையிலும் நன்கொடையாளா்கள் மற்றும் நலம் விரும்பிகளின் உதவியுடன் ஏழ்மை நிலையில் இருப்பவா்களுக்கு சாரிட்டியின் உதவி தொடா்ந்தது’ என்றாா்.

கொல்கத்தாவில் அன்னை தெரஸாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. சில நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததால் அந்த அறக்கட்டளையின் விண்ணப்பத்தை நிராகரித்ததாக உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி தெரிவித்தது.

இதற்கிடையே, சாரிட்டியின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியானதால், மத்திய அரசை திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டின.

அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதிலளித்தது. சாரிட்டி அமைப்பு தங்கள் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரிக்கை விடுத்ததாக, வங்கி சாா்பில் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com