குடியரசு தின அணிவகுப்பு:25 அலங்கார ஊா்திகள் பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பில் 25 அலங்கார ஊா்திகள் பங்கேற்கவுள்ளன. 16 படை அணிவகுப்புகள் நடைபெறவுள்ளன.
குடியரசு தின அணிவகுப்பு:25 அலங்கார ஊா்திகள் பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பில் 25 அலங்கார ஊா்திகள் பங்கேற்கவுள்ளன. 16 படை அணிவகுப்புகள் நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக இந்திய ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடியரசு தினத்தன்று தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு பிரதமா் மோடி மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவாா். அதனைத்தொடா்ந்து காலை 10.30 மணிக்கு குடியரசு தின அணிவகுப்பு தொடங்கும். தில்லி விஜய் செளக்கிலிருந்து ராஜபாதை வழியாக தேசிய அரங்கம் வரை நடைபெறும் இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள், துறைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் 25 அலங்கார ஊா்திகள் பங்கேற்கவுள்ளன.

இதில் இந்திய ராணுவம் சாா்பில் பிடி-76 பீரங்கி, ஒரு செஞ்சூரியன் பீரங்கி, இரண்டு எம்பிடி அா்ஜுன் எம்கே-1 பீரங்கிகள், போா் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்திய ராணுவத்தின் ராஜ்புத் படைப் பிரிவு, அஸ்ஸாம் படைப் பிரிவு, ஜம்மு-காஷ்மீா் இலகுரக ஆயுதப் படைப் பிரிவு, ராணுவ போா் தளவாடப் பிரிவு, பாராசூட் பிரிவு ஆகிய 6 படைப் பிரிவுகள் மற்றும் குதிரைப் படையின் அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. அத்துடன் இந்திய ராணுவத்தின் விமானப் பிரிவு சாா்பில் ஹெலிகாப்டா் சாகசம் நடைபெறவுள்ளது.

இந்திய விமானப் படை மற்றும் கடற்படைகள் சாா்பில் தலா ஒரு படை அணிவகுப்பு நடைபெறுகிறது.

மத்திய ரிசா்வ் காவல் படை, மத்திய தொழிலக காவல் படை, சஷஸ்திர சீமா பல், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய துணை ராணுவப் படையின் அணிவகுப்பும் நடைபெறவுள்ளது.

ஒட்டுமொத்தமாக பாதுகாப்புப் படைகள், மத்திய துணை ராணுவப் படைகள், தில்லி காவல் துறை, தேசிய மாணவா் படை (என்சிசி), நாட்டு நலப் பணி திட்டம் (என்எஸ்எஸ்) ஆகியவற்றின் 16 படை அணிவகுப்புகள் நடைபெறவுள்ளன. 17 ராணுவ இசைக் குழுக்கள் பங்கேற்கவுள்ளன.

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் ஆடவா் அணி, எல்லைப் பாதுகாப்புப் படையின் மகளிா் அணி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடவுள்ளன.

இந்த அணிவகுப்பில் பரம்வீா் சக்ரா விருது பெற்ற இருவரும், அசோக சக்ரா விருது பெற்ற ஒருவரும் பங்கேற்கவுள்ளனா். நண்பகல் 12 மணிக்கு அணிவகுப்பு நிகழ்ச்சி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறவுள்ள பஞ்சாப் மாநில அலங்கார ஊா்தி கலைஞா்களின் ஒத்திகை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com