தேர்தலுக்கு முன் கர்நாடக முதல்வர் மாற்றம்?

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

"முதல்வர் பசவராஜ் பொம்மை செயல்பாடுகள் கட்சியின் மத்தியத் தலைமைக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி கவனம் செலுத்தி வருவதால், இதுபற்றிய முடிவு தேர்தல் முடிந்தவுடன் எடுக்கப்படும்.

இடைத் தேர்தல் தோல்விகள், உள்ளாட்சித் தேர்தல் தோல்விகள், பொம்மையின் சொந்த தொகுதியான ஹனகல் தொகுதி தோல்வி உள்ளிட்டவை 2023 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கட்சித் தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் பலரின் எதிர்மறை கருத்துகள் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, இளம் தலைவரை முதல்வராகத் தேர்வு செய்யலாம். அரசியல் பலம் கொண்ட பஞ்சமசாலி சமுதாயத்திலிருந்தோ அல்லது தலித் சமுதாயத்திலிருந்தோ முதல்வரைத் தேர்வு செய்யலாம். 

மறுபுறம், அமைச்சரவை மாற்றியமைப்பது குறித்த பேச்சுகளும் இருந்து வருகின்றன. மூத்த அமைச்சர்களான கேஎஸ் ஈஸ்வரப்பா, முருகேஷ் நிரனி, சிசி பாட்டில் மற்றும் பிரபு சௌஹான் உள்ளிட்டோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம். மேலும், அமைச்சரவையில் 4 இடங்கள் காலியாக இருப்பதால், அதைக் கைப்பற்ற 40 எம்எல்ஏ-க்கள் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிலிருந்து மாறிய பல்வேறு எம்எல்ஏ-க்கள் நெருக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன."

தகவலறிந்த பாஜகவின் முக்கிய வட்டாரங்கள் கூறுகையில், "கர்நாடக பாஜக பிரிவைப் பலப்படுத்த, கட்சி மேலிடம் முதலில் முதல்வரை மாற்றி பின்னர் அமைச்சரவையை மாற்றியமைக்கும்" என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com