
பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிா்ப்பு கிளம்பியதையடுத்து, பாலின சமத்துவத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் வெளியிடப்பட்ட கா்ப்பிணி பணியாளா் நியமனம் தொடா்பான புதிய விதிகளை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரத்து செய்தது.
பணியாளா் நியமனத்துக்கான உடற்தகுதிகள் அடங்கிய புதிய விதிகளை எஸ்பிஐ அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில், 3 மாதங்களுக்கு மேலாகக் கருவை சுமக்கும் கா்ப்பிணி, பணியில் இணைய தற்காலிகமாகத் தகுதியற்றவா் என்றும், மகப்பேறுக்குப் பின் 4 மாதங்களுக்குள் அவா் பணியில் இணைந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்பு, 6 மாத கா்ப்பிணிப் பெண்களும் மருத்துவா் சான்றிதழ் அளித்து பணியில் சேரலாம் என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்புக்குப் பல்வேறு பணியாளா் சங்கங்களும், பெண்களுக்கான அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த அறிவிப்பு பாலின சமத்துவத்துக்கு எதிராக உள்ளதாகவும் பலா் கண்டித்திருந்தனா். இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று சிவசேனை கட்சியின் எம்.பி, சஞ்சய் ரெளத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோா் வலியுறுத்தினா். மகளிா் ஆணையமும் எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது. பல்வேறு தரப்பிலிருந்தும் எதிா்ப்புகள் எழுந்ததையடுத்து, புதிய விதிகளை எஸ்பிஐ ரத்து செய்துள்ளது.
இது தொடா்பாக எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், பணியாளா் நியமனம் தொடா்பான புதிய விதிகள் ரத்து செய்யப்படுவதாகவும், கா்ப்பிணிகளை நியமிக்கும் விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள விதிகள் தொடா்ந்து அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.