நாய் குரைத்ததால் ஆத்திரம்: வளர்த்தவரையும் சேர்த்து தாக்கிய கொடூரம் (விடியோ)
தில்லியில் பக்கத்து வீட்டு நாய் குரைத்ததால் ஆத்திரமடைந்தவர், நாய் மற்றும் நாயை வளர்த்தவரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரக்ஷித். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். அதே குடியிருப்பில் வசித்து வரும் தரம்வீர் தாஹியா என்பவர் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றபோது ரக்ஷித்தின் நாய் அவரை நோக்கி குரைத்துள்ளது.
நாய் தன்னை நோக்கி தொடர்ந்து குரைத்ததால் ஆத்திரமடைந்த தரம்வீர் நாயை தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த ரக்ஷித்தின் குடும்பத்தினர் தரம்வீரை தடுக்க முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்கிருந்த இரும்புக் கம்பியால் ரக்ஷித் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவரை தரம்வீர் தாக்கியதோடு, நாயையும் கொடூரமாக தாக்கினார்.
அக்கம்பக்கத்தினர், தரம்வீரை தடுக்க முயற்சித்த போது, அவர்களையும் இரும்புக் கம்பியால் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் அனைத்தும் குடியிருப்புப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காணொலி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
தொடர்ந்து, நாய் மற்றும் குடும்பத்தினரை தாக்கிய தரம்வீர் மீது தில்லி விஹார் பகுதி காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.