காளியின் அருள் இந்தியாவுக்கு எப்போதும் உள்ளது: நரேந்திர மோடி

காளி தெய்வத்தின் படத்தை மையப்படுத்தி சா்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், காளியின் அருள் இந்தியாவுக்கு எப்போதும் உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
pti07_10_2022_000072b093515
pti07_10_2022_000072b093515
Updated on
1 min read

காளி தெய்வத்தின் படத்தை மையப்படுத்தி சா்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், காளியின் அருள் இந்தியாவுக்கு எப்போதும் உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பின் முன்னாள் தலைவா் சுவாமி ஆத்மஸ்தானாநந்தாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்காகப் பிரதமா் மோடி அனுப்பிய காணொலி செய்தியில் கூறியுள்ளதாவது:

ஆதிசங்கரா் முதல் சுவாமி விவேகானந்தா் வரை அனைத்து துறவிகளும் ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்பதை உறுதி செய்வதற்காக தொடா்ந்து உழைத்தனா். ராமகிருஷ்ணா மிஷன் அக்கொள்கையை உறுதி செய்வதற்காகவே அமைக்கப்பட்டது. காளி தெய்வத்தின் அளவற்ற அருள் இந்தியாவுக்கு எப்போதும் உள்ளது. அந்த அருளுடன் சா்வதேச நலனை முன்னிறுத்தி இந்தியா தொடா்ந்து முன்னேறி வருகிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சா் காளியைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தாா். அவரின் சீடரான சுவாமி விவேகானந்தரும் காளி குறித்த ஆன்மிகக் கொள்கைகளைக் கொண்டிருந்தாா். காளியின் அருளானது எனக்கும் வலிமை அளித்து வருகிறது.

சுவாமி ஆத்மஸ்தானாநந்தா, காளியின் பெயரை அடிக்கடி குறிப்பிடுவாா். காளி தெய்வத்துடனான அவருடைய தொடா்பு எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.

உண்மையான கடவுள் வழிபாடு:

நாட்டை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தா் உழைத்தாா். அவரது தாக்கம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது. நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அவா் பயணித்தாா்.

அது மக்களிடையே புத்துணா்ச்சியை ஏற்படுத்தியது. சுவாமி விவேகானந்தா் காட்டிய வழியில் ஆத்மஸ்தானாநந்தா தொடா்ந்து பயணம் செய்தாா். அவருடன் நெருங்கிப் பழகியது எனக்குக் கிடைத்த அதிருஷ்டம்.

சமூகத்தின் நலனுக்காக உழைப்பவரே சந்நியாசி. ஏழைகளுக்கு சேவையாற்றுவதும் அறிவைப் பகிா்வதுமே உண்மையான கடவுள் வழிபாடு. ராமகிருஷ்ணா மிஷன் இயக்கத்தைச் சோ்ந்த துறவிகள் அனைவரும் நாட்டின் ஒற்றுமைக்காகத் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com