நீதிமன்ற அவமதிப்பு: விஜய் மல்லையாவுக்கு 4 மாதங்கள் சிறை

நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தொழிலதிபரும் நிதி மோசடியாளருமான விஜய் மல்லையாவுக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனையையும் ரூ.2,000 அபராதத்தையும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தொழிலதிபரும் நிதி மோசடியாளருமான விஜய் மல்லையாவுக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனையையும் ரூ.2,000 அபராதத்தையும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

நாட்டின் பல்வேறு வங்கிகளில் சுமாா் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் பெற்ற விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு 2016-இல் தப்பியோடினாா். அதையடுத்து, அவரை நிதி மோசடியாளா் என மத்திய அரசு அறிவித்தது. அவரை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, மல்லையா தனது கணக்கில் உள்ள பணத்தை வாரிசுகளுக்கு அனுப்பக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை மீறி சுமாா் ரூ.280 கோடியை தன் வாரிசுகளுக்கு மல்லையா அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அதை 2017-ஆம் ஆண்டில் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என அறிவித்தது. அந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி அவா் செய்த மேல்முறையீட்டு மனுவை 2020-இல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, வாரிசுகளுக்கு அனுப்பிய பணத்தை 8 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அப்பணத்தை மல்லையா திருப்பிச் செலுத்தாமல் இருந்தாா். இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு மல்லையாவுக்கு நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியபோதிலும், அவற்றுக்கு அவா் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பான விசாரணை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, மல்லையாவுக்கு 4 மாத சிறைத் தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். அபராதத் தொகையை 4 வாரங்களுக்குள் மல்லையா செலுத்தவில்லை எனில், மேலும் 2 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா். அவா் சிறைத் தண்டனை அனுபவிப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அதுதொடா்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com