மகளிருக்காக இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறும் சாதாரண கட்டண பேருந்து!

பெண் பயணிகள் எளிதில் அடையா­ளம் காணும் வகையில், பேருந்துகளுக்கு விரைவில் இளஞ்சிவப்பு நிற சாயம் பூசப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மகளிருக்காக இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறும் சாதாரண கட்டண பேருந்து!
Published on
Updated on
1 min read

பெண் பயணிகள் இல­வ­சப் பய­ணம் மேற்கொள்ளும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அந்த பேருந்துகள் மட்டும் விரைவில் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறவிருப்பதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சாதாரண மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அரசுப் போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. இந்த திட்டம் அறிமுகமான பிறகு, அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களின் வருகை அதிகரித்து வருகிறது.

அதன்படி, மாநிலம் முழுவதும் இயங்கும் அரசு நகரப் பேருந்துகளில் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமின்றி இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்தாண்டு 40 சதவீதமாக இருந்த மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் எண்ணிக்கை, 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், 

கடந்த ஓராண்டில், 132 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். மேலும் இத்திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்த எம்டிசி உள்ளிட்ட பல்வேறு மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு மானியமாக சுமார் ரூ1,600 கோடியை மாநில அரசு அனுமதித்துள்ளது. 

சாதாரணக் கட்டணப் பேருந்தை அடையாளம் காண, பெரும்பாலும் பேருந்துகளில் முன் கண்ணாடியில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். சில பேருந்துகளில் இருக்காது. அப்படி ஒட்டியிருந்தாலும் கூட அவை தெளிவாகத் தெரிவதில்லை. இதனால் பல நேரங்களில் பெண்கள் எக்ஸ்பிரஸ் அல்லது டீலக்ஸ் பேருந்துகளில் ஏறி பயணச்சீட்டு எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சாதாரண பேருந்துகளின் நிறத்தை இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்ற  முடிவு செய்துள்ளது. 

அதன் முன்னோட்டமாக, அடுத்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் இந்த இளஞ்சிவப்பு நிற பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின்னர் அனைத்து வழித்தடங்களிலும் இளஞ்சிவப்பு நிறப் பேருந்துகள் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com