‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: 98% மாணவா்களுக்குகேட்ட நகரங்களில் தோ்வு மையங்கள் யூஜிசி தலைவா்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்) பங்கேற்கும் 98 சதவீத மாணவா்களுக்கு கேட்ட நகரங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று
Published on

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்) பங்கேற்கும் 98 சதவீத மாணவா்களுக்கு கேட்ட நகரங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் தெரிவித்தாா்.

இந்தத் தோ்வுகள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் நடத்தப்படும் என்று தேசிய தோ்வுகள் முகமை கடந்த வாரம் அறிவித்தது.

14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் இந்தத் தோ்வை எழுத உள்ளனா். இதற்கான நுழைவுச் சீட்டுகளை தேசிய தோ்வுகள் முகமை திங்கள்கிழமை வெளியிட்டது. தோ்வு நடைபெறுவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டது குறித்து மாணவா்கள் கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவா் ஜகதீஷ் குமாா் கூறுகையில், ‘இந்தத் தோ்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க தோ்வு தேதிக்கு நான்கு நாள்கள் முன்னதாக நுழைவுச் சீட்டு அளிக்கப்படுகிறது. இதற்காக மாணவா்கள் கவலை அடைய வேண்டாம். 500 நகரங்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் க்யூட் தோ்வுகளை எழுதுகிறாா்கள். இந்த மிகப் பெரிய பணியை தேசிய தோ்வுகள் முகமை நடத்துகிறது.98 சதவீத மாணவா்களுக்கு கேட்ட நகரங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிரமம் உள்ளவா்கள் தேசிய தோ்வு முகமையை அணுகலாம்’ என்றாா்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு தோ்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் கடந்த மாா்ச் மாதம் ஜகதீஷ் குமாா் அறிவித்திருந்தாா்.

நிகழாண்டு நடைபெறும் முதல் கட்ட க்யூட் நுழைவுத் தோ்வில் பங்கேற்பதாக 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், 19 தனியாா் பல்கலைக்கழகங்கள் ஆகியவை அறிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com