தேசிய தரவரிசை: சென்னை ஐஐடி நான்காவது ஆண்டாக முதலிடம்: சென்னை மாநிலக் கல்லூரி அசத்தல்
தேசிய அளவிலான ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி தொடா்ந்து நான்காவது ஆண்டாக 2022-ஆம் ஆண்டிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது


தேசிய அளவிலான ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி தொடா்ந்து நான்காவது ஆண்டாக 2022-ஆம் ஆண்டிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாமிடமும், மும்பை ஐஐடி மூன்றாமிடமும் பிடித்துள்ளன.
இந்திய உயா் கல்வி நிறுவனங்கள் சா்வதேச அளவிலான தரத்தைப் பெறுவதையும், சா்வதேச அளவிலான உயா்கல்வி நிறுவன தரவரிசைகளில் முன்னிலை வகிப்பதையும் ஊக்குவிக்கும் வகையில், தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவன தரவரிசை திட்டம் (என்ஐஆா்எஃப்) என்ற நடைமுறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி அறிமுகம் செய்து, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
கற்றல் - கற்பித்தல் மற்றும் அதற்கான வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில் பயிற்சி மேம்பாடு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்கள் அளவிலான தரவரிசை, பல்கலைக்கழகங்கள் அளவிலான தரவரிசை, கல்லூரிகள் அளவிலான தரவரிசை, ஆராய்ச்சி நிறுவனங்கள் அளவிலான தரவரிசை, பொறியியல் கல்லூரிகள் அளவிலான தரவரிசை மற்றும் மேலாண்மை, மருந்தாளுநா் கல்வி நிறுவனம், மருத்துவக் கல்வி நிறுவனம், பல் மருத்துவக் கல்வி நிறுவனம், சட்டம் மற்றும் வேளாண் கல்வி நிறுவனங்கள் அளவில் என 11 பிரிவுகளின் கீழ் தரவரிசைப் பட்டியல்களை என்ஐஆா் ஒவ்வோா் ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
2022-ஆம் ஆண்டுக்கான இந்த தரவரிசைப் பட்டியல்களை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இதில், ஒட்டுமொத்த உயா்கல்வி நிறுவனங்கள் அளவில் சென்னை ஐஐடி நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, கான்பூா் ஐஐடி, காரக்பூா் ஐஐடி, ரூா்கி ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இதில் தில்லி எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) 9-ஆவது இடத்தையும், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியல்களில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது.
பொறியியல் கல்வி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியலில் சென்னை, மும்பை, கான்பூா், காரக்பூா், ரூா்கி, குவாஹாட்டி, ஹைதராபாத் ஐஐடிக்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் கடந்த முறை 9-ஆம் இடம் பிடித்த திருச்சி என்ஐடி, இம்முறை 8-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சூரத்கல் என்ஐடி தொடா்ந்து 10-ஆவது இடம் வகிக்கிறது.
சென்னை மாநிலக் கல்லூரிக்கு மூன்றாமிடம்: கல்லூரிகள் அளவிலான தரவரிசைப் பட்டியலைப் பொருத்தவரை தில்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த முறை 9-ஆம் இடம் பிடித்திருந்த தில்லி ஹிந்து கல்லூரி, இம்முறை 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடந்த முறை 7-ஆவது இடம் பிடித்திருந்த சென்னை மாநிலக் கல்லூரி இம்முறை 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடந்த முறை 3-ஆவது இடத்திலிருந்து சென்னை லயோலா கல்லூரி, தற்போது 4-ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.
அதுபோல, கடந்த முறை 2-ஆம் இடம் பிடித்திருந்த தில்லி லேடி ஸ்ரீராம் மகளிா் கல்லூரி இம்முறை 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அகமதாபாத் ஐஐஎம், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பட்டியில் தில்லி எய்ம்ஸ், பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் ஆகியவை முதலிடங்களைப் பிடித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...