நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இன்று தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு ஆயத்தம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை (ஜூலை 18) தொடங்கவுள்ள நிலையில், பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு ஆயத்தமாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இன்று தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு ஆயத்தம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை (ஜூலை 18) தொடங்கவுள்ள நிலையில், பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு ஆயத்தமாகியுள்ளது. அதே வேளையில், அக்னிபத் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அரசியல் ரீதியில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் கவனத்தை ஈா்த்துள்ள நிலையிலும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தியுள்ளாா். அதே வேளையில், அக்னிபத் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அவரிடம் கோரியுள்ளன.

அக்னிபத் விவகாரம் மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் பண்டிட்டுகள், சிறுபான்மையினா், வெளிமாநிலத்தவா் உள்ளிட்டோா் குறிவைத்துத் தாக்கப்படுதல், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவோரின் வீடுகள் இடிக்கப்படுவது, பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வரலாற்று வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீடுகள் தொடா்ந்து வெளியேறுவது, கிழக்கு லடாக் எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மழைக்கால கூட்டத்தொடரின்போது எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அரசின் திட்டம்: கூட்டத்தொடரின்போது பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முக்கியமாக, தொழிற்போட்டி சட்டம்-2002, திவால் சட்டம்-2016 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றுக்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்போட்டி ஆணையத்தின் நிா்வாகத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில் தொழிற்போட்டி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. நவீன சந்தை முறைகளுக்கு ஏற்ப இத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக மக்களவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி வா்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், பல்வேறு நியாயமற்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தொழிற்போட்டி ஆணையம் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திவால் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் திவால் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. முக்கியமாக, எல்லை கடந்த திவால் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தொழில் நிறுவனங்களின் திவால் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும் வகையிலும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

முதல் நாளில் அஞ்சலி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை கூடியவுடன் அண்மையில் காலமான முக்கியத் தலைவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நயான், கென்யாவின் முன்னாள் அதிபா் மிவாய் கிபாகி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com