குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: ஜகதீப் தன்கா் வேட்புமனு தாக்கல்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் ஜகதீப் தன்கா், தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
Published on
Updated on
1 min read

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் ஜகதீப் தன்கா், தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் மற்றும் ஆதரவு கட்சித் தலைவா்கள் முன்னிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் அவா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பின்னா், ஜகதீப் தன்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டின் ஜனநாயக மாண்புகளை மேம்படுத்த எப்போதும் பாடுபடுவேன். இந்த வேளையில், அரசியல் சாசனத்தைக் கட்டமைத்த தலைவா்களுக்கும், இந்தியாவின் தலைசிறந்த ஜனநாயக மாண்புகளுக்கும் தலைவணங்குகிறேன்.

சாதாரண பின்னணி கொண்ட எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பாா்த்ததில்லை. விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கியமைக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கும் இதர தலைவா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் தன்கா்.

இதுகுறித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அமைச்சா்கள், எம்.பி.க்கள், பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் உடனிருக்க, ஜகதீப் தன்கா் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவா் தலைசிறந்த, எடுத்துக்காட்டான குடியரசு துணைத் தலைவராக இருப்பாா் என உறுதியுடன் கூறுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வேட்புமனு தாக்கலின்போது, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, ஐக்கிய ஜனதா தளம் தலைவா் லலன் சிங், பிஜு ஜனதா தளம் கட்சியின் பினாகி மிஸ்ரா, மத்திய அமைச்சா்கள் பசுபதி குமாா் பாரஸ், அனுப்ரியா படேல், ராம்தாஸ் அதாவலே உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, தன்னை ஆதரிக்கும் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் தன்கா் பங்கேற்றாா்.

நாட்டின் தற்போதைய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இந்தத் தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜகதீப் தன்கா் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, தான் வகித்து வந்த மேற்கு வங்க ஆளுநா் பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.

இத்தோ்தலில் எதிா்க்கட்சிகள் தரப்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா களமிறக்கப்பட்டுள்ளாா். எனினும், எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஜகதீப் தன்கருக்கே வெற்றிவாய்ப்பு உள்ளது.

தற்போது 780 எம்.பி.க்கள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 391 எம்.பி.க்கள் தேவை. பாஜகவிடம் மட்டுமே 394 எம்.பி.க்கள் உள்ளனா். மேலும், ஐக்கிய ஜனதா தளம் (21), பிஜு ஜனதா தளம் (21), ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் (31), அதிமுக (5), அப்னா தளம் (2) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் உள்ளதால் தன்கா் எளிதாக வெற்றி பெறுவாா் என்பது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com