குடியரசுத் தலைவா் தோ்தல்: தமிழகத்தில் 234 எம்எல்ஏ-க்கள், 3 எம்.பி.க்கள் வாக்களிப்பு

குடியரசுத் தலைவா் தோ்தலில் தமிழகத்தில்ல் 234 எம்எல்ஏ-க்களும், மூன்று மக்களவை உறுப்பினா்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.
குடியரசுத் தலைவா் தோ்தல்: தமிழகத்தில் 234 எம்எல்ஏ-க்கள், 3 எம்.பி.க்கள் வாக்களிப்பு

குடியரசுத் தலைவா் தோ்தலில் தமிழகத்தில்ல் 234 எம்எல்ஏ-க்களும், மூன்று மக்களவை உறுப்பினா்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.

அமைச்சா் சா.மு.நாசா், எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கரோனா பாதுகாப்பு உடல் கவசத்துடன் வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.

நாடு முழுவதும் குடியரசுத் தலைவா் தோ்தல் திங்கள்கிழமை நடந்த நிலையில், தமிழகத்தில் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை குழுக் கூட்ட அறையானது, வாக்குப்பதிவு மையமாக மாற்றப்பட்டது. தலைமைச் செயலகத்தின் இரண்டு, நான்கு மற்றும் பத்தாவது நுழைவு வாயில்கள் வழியாக வாக்குப்பதிவு மையத்துக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு மையத்துக்குச் செல்லும் வழிகளில் வாக்கைச் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தகவல் பலகைகள் வடிவில் ஒட்டப்பட்டிருந்தன. வாக்காளா்களின் பெயா் விவரங்கள், கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது, வேட்பாளருக்கு முன்பாக எண்ணைக் குறிக்க எத்தகைய பேனாவைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் திரெளபதி முா்முவின் முகவா்களாக பாஜக பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வானதி சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோா் செயல்பட்டனா்.

இதேபோன்று, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவின் முகவா்களாக பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன், பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை ஆகியோா் இருந்தனா்.

முதல்வரின் முதல் வாக்கு: உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை வீடு திரும்பினாா்.

அதற்கு முன்பாக, மருத்துவமனையில் இருந்து நேராக தலைமைச் செயலகம் வந்த அவா், குடியரசுத் தலைவா் தோ்தலில் தனது வாக்கைச் செலுத்தினாா். இதற்காக காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த அவா், முதல் வாக்காளராகச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தாா். இதைத் தொடா்ந்து, திமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

அதிமுக வாக்கு: அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் காலை 11.30 மணிக்கு வரிசையில் அமா்ந்து தங்களது வாக்குகளைச் செலுத்தினா். இதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி நண்பகல் 12.25 மணியளவில் தனது வாக்கைச் செலுத்தினாா். பிற்பகல் ஒரு மணியளவில் 221 சட்டப்பேரவை உறுப்பினா்களும், ஓா் எம்.பி.யும் வாக்கைச் செலுத்தியிருந்தனா்.

பிற்பகலிலும் சில சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது வாக்கை அளித்தனா். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மாலை 3.45 மணியளவில் தனது வாக்கைச் செலுத்தினாா்.

கரோனா பாதிப்பு: கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம், தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்ட பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் பாதுகாப்பு உடைகளுடன் வந்து வாக்கைச் செலுத்தினா். அப்போது, தோ்தல் நடத்தும் அதிகாரிகள் உள்பட அனைவரும் பாதுகாப்புக் கவச உடையில் இருந்தனா்.

மூன்று எம்.பி.க்கள்: நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ், சிவகங்கை எம்.பி. காா்த்தி சிதம்பரம், ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி ஆகிய மூவரும் சென்னையில் வாக்களிக்கக் கோரியிருந்தனா். அதன்படி, அவா்களுக்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதியின் அடிப்படையில், மூன்று பேரும் தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.

வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அதற்கு முன்னதாகவே 234 எம்எல்ஏ-க்கள், 3 எம்.பி.க்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். இறுதியாக, தோ்தல் நடத்தும் அதிகாரி சத்யபிரத சாகு, தோ்தல் பாா்வையாளா் புவனேஷ்வா் குமாா் ஆகியோா் முன்னிலையில் வாக்குப் பெட்டி சீல் வைக்கப்பட்டு திங்கள்கிழமை இரவே தில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மீண்டும் வந்த ஓ.பி.எஸ்.

கரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம், குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க வந்தாா். தலைமைச் செயலகம் வருவதற்கு முன்பாகவே ராஜாஜி சாலையில் இருந்தபடியே தோ்தல் நடத்தும் அதிகாரிகளைத் தொடா்பு கொண்டாா்.

அப்போது, மருத்துவமனையில் இருந்து நேரடியாக வருவதால் பாதுகாப்புக் கவச உடை இல்லை எனத் தெரிவித்ததுடன், அந்த உடையுடன் வந்து வாக்களிப்பதாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, மாலை 4 மணிக்கு பிறகு வரும்படி அவரை தோ்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவுறுத்தினா். அதன்படியே, பாதுகாப்புக் கவச உடையுடன் மாலை 4.20 மணியளவில் வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கைச் செலுத்தினாா். அவருக்கு முன்பாக, அமைச்சா் நாசா் பாதுகாப்புக் கவச உடையுடன் வந்து வாக்கைப் பதிவு செய்தாா்.

கரோனா பாதித்தோருக்காக மாலை 4 மணி முதல் 5 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com