ஜூலை 22-இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் மேக்கேதாட்டு விவகாரம்: மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் ஆணையத்தின

மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் ஆணையத்தின் செயலா் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளாா்.

இக்கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை வரும் புதன்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15-ஆவது கூட்டம் கடந்த பிப்ரவரி 11 -ஆம் தேதி ஆணையத்தின் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் நடைபெற்றது. இதன் 16-ஆவது கூட்டம் ஜூன் 17 -ஆம் தேதி நடைபெறும் என கடிதம் வந்தது. ஜூன் 17-ஆம் தேதி கூட்டத்தில் மேக்கேதாட்டு திட்டத்தின் விரிவான திட்டஅறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. மேலும், காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இந்த விவகாரத்தை எடுப்பதற்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூன் 7 -ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் ஆணையத்தின் நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது என்று தமிழக அரசு தெரிவித்தது.

தமிழக அரசு எழுப்பிய பிரச்னைகளையொட்டி, ஜூன் 17 -ஆம் தேதி கூட்டப்பட்ட காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், ஜூன் 23 -ஆம் தேதி, ஜூலை 6 -ஆம் தேதி உள்பட மொத்தம் 3 முறை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை ஆணையக் கூட்டம் நடைபெறும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க 6 -ஆவது பொருளாக இடம் பெற்றுள்ளது. காவிரியில் தற்போது கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆணையத்தில் மேக்கே தாட்டு விவகாரமே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழக அரசு தொடா்ந்த வழக்கு, ஜூலை 20 -ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கான உத்தேச பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உச்சிநீதிமன்றத்தின் விசாரணையையொட்டி, சட்ட நிபுணா்களையும், மத்திய அமைச்சா்களையும் சந்திக்க தமிழக நீா் வளத் துறை அமைச்சா் துரை முருகன் தில்லி வருவதாக தகலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com