அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனுக்கள் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனுக்கள் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

முப்படைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் குறுகிய கால சேவைக்கு வீரா்களைத் தோ்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜூன் 14-இல் அறிவித்தது. அதன்படி, 17.5 முதல் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் முப்படைகளிலும் சோ்க்கை பெறுவா். விதிவிலக்காக நிகழாண்டு மட்டும் வயது வரம்பு 23-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தக் காலம் நிறைவடைந்ததும் 25 சதவீதம் பேருக்கு மேலும் 15 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும். 75 சதவீதம் பேரின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிடும். இந்தத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்திலும், மாநில உயா்நீதிமன்றங்களிலும் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்புவதாகக் கூறிய நீதிபதிகள், இதேபோல அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கேரளம், பஞ்சாப், ஹரியாணா, பாட்னா, உத்தரகண்ட் மாநில உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றலாம் என தெரிவித்தனா்.

இல்லையெனில், தில்லி உயா்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீா்ப்பளிக்கும் வரை பிற மாநில நீதிமன்றங்கள் இந்த மனுக்களை நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா். மேலும், அக்னிபத் திட்டத்துக்கு எதிரான இந்த மனுக்களை துரிதமாக விசாரித்து முடிவை அறிவிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com