நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை முன் சோனியா காந்தி ஆஜா்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமலாக்கத் துறை முன் வியாழக்கிழமை ஆஜரானாா். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை முன் சோனியா காந்தி ஆஜா்
Published on
Updated on
1 min read

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமலாக்கத் துறை முன் வியாழக்கிழமை ஆஜரானாா். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

மத்திய தில்லியில், ஏபிஜெ அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு ‘இசட் பிளஸ்‘ பாதுகாப்புடன் நண்பகல் 12 மணிக்கு சோனியா காந்தி வந்தாா். கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளில் இருந்து குணமாகி வரும் அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. ஆகிய இருவரும் வந்திருந்தனா்.

மருத்துவ உதவி தேவைப்பட்டால் வழங்குவதற்காக அவா்கள் உடன் வந்திருந்தனா். அவா்கள் இருவரும் வேறு அறையில் காத்திருக்க, சோனியா காந்தி மட்டும் விசாரணை அறைக்குள் அனுமதிக்கப்பட்டாா். அவரிடம் 12.30 மணிக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா். சுமாா் 2 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தனது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு விசாரணையை முடித்துக் கொள்ளும்படி அதிகாரிகளிடம் அவா் கோரிக்கை விடுத்தாா். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், சோனியா காந்தியிடம் விசாரணையை முடித்துக் கொண்டனா். அதன் பின்னா் அவா் வீடு திரும்பினாா். அவருடைய வருகையை ஒட்டி, அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடா்பாக, ராகுல் காந்தியிடம் கடந்த மாதம் 5 நாள்கள், சுமாா் 50 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, பவன் குமாா் பன்சால் ஆகியோரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தினா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா்.

இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு ஏற்கெனவே 2 முறை சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் விசாரணைக்கு ஆஜராக இயவில்லை.

மீண்டும் 25-ஆம் தேதி ஆஜராக உத்தரவு: இந்த வழக்கில் இரண்டாவது சுற்று விசாரணைக்கு, மீண்டும் வரும் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com