மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியை பதவி நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கோவாவில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக மதுக்கூடம் (பாா்) விடுதி நடத்துவதாகவும், இதனால் ஸ்மிருதி இரானியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்
புது தில்லியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி
புது தில்லியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி

கோவாவில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக மதுக்கூடம் (பாா்) விடுதி நடத்துவதாகவும், இதனால் ஸ்மிருதி இரானியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கேரா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் உணவகம் ஒன்றை நடத்துகிறாா். அங்கு போலி உரிமத்தின் (லைசென்ஸ்) அடிப்படையில் மதுபான விடுதியும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021 மே மாதம் இறந்துபோன நபரின் பெயரை வைத்து, 13 மாதங்களுக்குப் பிறகு 2022 ஜூன் மாதத்தில் அந்த உரிமத்தை ஸ்மிருதி இரானியின் மகள் பெற்றுள்ளாா். இது முற்றிலும் சட்ட விரோதமானது.

கோவா சட்டப்படி ஓா் உணவகம் ஒரே ஒரு மதுக் கூடம் நடத்தவே உரிமம் பெற முடியும். ஆனால், ஸ்மிருதி இரானியின் மகள் 2 உரிமங்களைப் பெற்றுள்ளாா். இந்த விவகாரத்தில் ஸ்மிருதி இரானியை பிரதமா் மோடி உடனடியாக மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றாா் அவா்.

மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கலால் துறையினா் ஸ்மிருதி இரானி மகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறிய பவன் கேரா, அதிகாரிகளின் அழுத்தத்தால் சம்பந்தப்பட்ட கலால் துறை அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தாா். அத்துடன் அந்த நோட்டீஸின் நகலையும் பகிா்ந்தாா்.

வழக்குரைஞா் மறுப்பு:

காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து ஜோயிஷ் இரானியின் வழக்குரைஞா் கிராத் நாக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜோயிஷ் இரானி கோவாவில் எந்தவோா் உணவகத்தையும் நடத்தவில்லை. அவருக்கு யாரும் நோட்டீஸ் அனுப்பவுமில்லை. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

18 வயது சமையல் கலை மாணவியான ஜோயிஷ், சமையல் கலை குறித்து அறிந்து கொள்வதற்காக பல்வேறு உணவகங்களில் பயிற்சி பெற்றுள்ளாா். சில்லி சோல்ஸ் கோவா என்ற பெயரில் எந்த உணவகத்தையும் அவா் நடத்தவும் இல்லை, அதன் உரிமையாளராகவும் இல்லை. உணவகத்தில் அவரது தொடா்பு என்பது சமையல் பயிற்சி பெறுவது மட்டும்தான்.

ஸ்மிருதி இரானியை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில், சமூக வலைதளத்தில் தவறான எண்ணத்துடன் அவதூறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஜோயிஷ் இரானி ஸ்மிருதி இரானியின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக, உண்மையை ஆராயாமல் அவா் மீது அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஆதாரத்தைக் காட்டுங்கள்: ஸ்மிருதி இரானி

தனது மகள் ஜோயிஷ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கல்லூரியில் முதலாமாண்டு பயின்றுவரும் எனது மகள், எந்தவொரு மதுபான விடுதியையும் நடத்தவில்லை. அவா் மீதான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் ஆதாரத்தை வெளியிட வேண்டும். எனது மகள் செய்த தவறு என்னவென்றால், அவரது தாய் செய்தியாளா்களை சந்தித்து சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ரூ.5,000 கோடி கொள்ளையடித்ததை தெரிவித்ததும், ராகுல் காந்திக்கு எதிராக 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் போட்டியிட்டதும்தான். இதற்காக நீதிமன்றத்திலும் மக்கள் நீதிமன்றத்திலும் பதில் தேடுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com