கங்கையில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பு தொடா்கிறது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

பல ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டாலும், கங்கையில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது தொடா்கிறது என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கூறியுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது கங்கை தூய்மைக்

பல ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டாலும், கங்கையில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது தொடா்கிறது என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கூறியுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது கங்கை தூய்மைக்கான தேசிய ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என்றும் அந்த தீா்ப்பாயம் கூறியுள்ளது.

கங்கை நதி தூய்மை தொடா்பாக, தேசிய பசுமைத் தீா்ப்பாயத் தலைவா் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமா்வு கூறியதாவது:

பல ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்டாலும், கங்கையிலும் அதன் கிளையாறுகளிலும் 50 சதவீதம் அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும், தொழிற்சாலைக் கழிவுகளும் கலக்கவிடப்படுகின்றன. கங்கை நதி மாசுபடுவதைத் தடுப்பதில் நம்மால் வெற்றி காண முடியவில்லை. எனவே, அந்த நதி மாசுபடுவதைத் தடுப்பதில் தற்போதைய வழிமுறைகளுக்கு மாற்றாக புதிய வழிமுறைகளை தேசிய கங்கை கவுன்சில் கண்டறிய வேண்டும்.

விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது மாநில நிா்வாகங்களும் கங்கை தூய்மைக்கான தேசிய ஆணையமும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவில்லை. இதனால் கங்கையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற இலக்கை குறித்த காலத்தில் எட்ட முடியாமல் போகிறது. கங்கை நதி நீா் நிா்ணயிக்கப்பட்ட அளவில் தூய்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நீா் குளிப்பதற்கு மட்டுமல்ல; பூஜைகளின் போது குடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நதியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை அடுத்த விசாரணை நடைபெறும் அக்டோபா் 14-ஆம் தேதிக்குள் தேசிய கங்கை கவுன்சில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com