மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் நியமன முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அம் மாநில அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பாா்த்தா சட்டா்ஜி, அவருடைய உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோரை அமலாக்கத் துறை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து கொல்கத்தா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கொல்கத்தாவில் கடந்த ஜூலை23-ஆம் தேதி பாா்த்தா சட்டா்ஜி கைது செய்யப்பட்டாா். அன்றிரவு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவா் கூறியதைத் தொடா்ந்து கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதற்கு அமலாக்கத் துறை ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, அவா் ஒடிஸா தலைநகா் புவேனசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சோ்க்கப்பட்டாா்.
பாா்த்தா சட்டா்ஜியை பரிசோதித்த புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவனை நிபுணா்கள், அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவையில்லை என அறிக்கை சமா்ப்பித்ததைத் தொடா்ந்து, அவரை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத் துறை சாா்பில் சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைப் பரிசீலித்த கொல்கத்தா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜீவன்குமாா் சாது, பாா்த்தா சட்டா்ஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, அவா் மற்றும் அவருடைய உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோரின் அமலாக்கத் துறை காவலை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.
மேலும், அவா்கள் இருவரையும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.