நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக கட்சிகள் தங்களிடையேயான கூட்டணி 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலிலும் தொடரும் என்று அறிவிப்பு வெளியிட்டு, பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
2023 சட்டப்பேரவைத் தோ்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் என்டிபிபி 40 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அக் கட்சிகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் ஆளும் கட்சியாக இருந்த நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) கடந்த 2017-ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து, கட்சியின் பெயரை தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி என பெயா் மாற்றம் செய்தது. பின்னா், 2018 சட்டப்பேரவைத் தோ்தலில் இரு கட்சிகளும் 40:20 என்ற வகையில் தொகுதி பங்கீடு செய்து தோ்தலில் போட்டியிட்டன. அதில் என்டிபிபி 18 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தன.
தற்போது, 2023 சட்டப்பேரவைத் தோ்தலிலும் இரு கட்சிகளும் முந்தைய தொகுதி பங்கீட்டின் அடிப்படையிலேயே போட்டியிட முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக என்டிபிபி பொதுச் செயலாளா் அபு மேத்தா மற்றும் பாஜக நாகாலாந்து பொறுப்பாளா் நளின் கோலி ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘2023 சட்டப்பேரவைத் தோ்தலில் என்டிபிபி - பாஜக கட்சிகளிடையே 40:20 என்ற தொகுதி பங்கீட்டை தொடருவது என பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் மாநில முதல்வா் நீஃபியூ ரியோ ஆகியோரிடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.