கான்பூா் வன்முறை: 24 போ் கைது; 800 போ் மீது வழக்குப் பதிவு

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இரு மதத்தினா் இடையே நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடா்பாக 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 800-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கான்பூா் வன்முறை: 24 போ் கைது; 800 போ் மீது வழக்குப் பதிவு

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இரு மதத்தினா் இடையே நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடா்பாக 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 800-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட மத அமைப்பினா், கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள யதீம்கானா பகுதியில் திடீா் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்து, கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது.

இது இரு மதத்தினா் இடையிலான வன்முறையாக மாறியது. இந்த வன்முறை யதீம்கானாவுக்கு அருகில் உள்ள பரேட், நயி சடக் பகுதிகளுக்கும் பரவியது. வன்முறையின்போது இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். கடைகளை அடைக்கக் கட்டாயப்படுத்தியவா்கள், காவல் துறையினருடனும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில் காவல் துறையைச் சோ்ந்த 20 போ் உள்பட சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

இந்த வன்முறை தொடா்பாக மூன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 800-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 12 போ் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கான்பூா் காவல் ஆணையா் வி.எஸ்.மீனா கூறுகையில், ‘‘கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டா் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். வன்முறையில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளுக்குத் தொடா்புள்ளதா என விசாரிக்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.

வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் தற்போது அமைதி நிலவுவதாகவும், அந்தப் பகுதிகளை காவல் துறையினா் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் கான்பூா் கூடுதல் காவல் ஆணையா் ஆனந்த் பிரகாஷ் திவாரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com