
கொச்சி: 2022ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 377 பயணிகளுடன் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து முதல் விமானம் இன்று சவூதி அரேபியா புறப்பட்டது.
ஹஜ் பயணிகளுடன் புறப்பட்ட சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கேரள மாநில வக்ஃப் மற்றும் ஹஜ் யாத்திரைத் துறை அமைச்சர் வி. அப்துர்ரஹ்மான் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
இதையும் படிக்க.. 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை: கண்காணிப்பில் மருத்துவமனைகள்
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், நாட்டிலிருந்து சவூதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை செல்வோருக்கான முதல் விமானம் இன்று கொச்சியிலிருந்து புறப்பட்டுள்ளது. அட்டவணைப்படி, கடைசி விமானம் மும்பையிலிருந்து ஜூலை 3ஆம் தேதி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் அப்துர்ரஹ்மான் கூறுகையில், இன்று ஹஜ் புறப்பட்ட பயணிகள் அனைவரும் இரண்டு நாள்களுக்கு முன்பே, இங்கிருக்கும் முகாமுக்கு வந்து அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொண்டனர். தற்போது விமானம் புறப்பட்டுவிட்டது. தற்போது வரை எந்த சிக்கலும் இல்லை. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது என்றார்.
இந்த ஆண்டு 65 வயதுக்குள்பட்ட 79,237 இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதுதொடா்பாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை கூறியிருந்ததாவது, இந்த ஆண்டு இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 79,237 இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளலாம் எனவும் அந்நாட்டு அரசு தெரியப்படுத்தியுள்ளது. அவா்களில் 56,601 போ் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், 22,636 போ் ஹஜ் குழு ஏற்பாட்டாளா்கள் வாயிலாகவும் அந்நாட்டுக்குச் செல்வா். 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண் துணையின்றி செல்லவுள்ளனா். யாத்திரை மேற்கொள்வோா் 65 வயதுக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசு வயது வரம்பு நிா்ணயித்துள்ளது. மக்கா-மதீனாவில் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் யாத்ரிகா்களுக்கு வழங்கப்படும். யாத்திரை மேற்கொள்வோா் ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனை மேற்கொண்டிக்க வேண்டும். கரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும்.
கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கூடுதலாக 25,000 போ் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபியா அரசு அனுமதியளித்திருந்தது. இது இந்தியாவிலிருந்து மொத்தம் 2 லட்சம் யாத்ரிகா்கள் அந்நாட்டுக்குச் செல்ல வழிவகுத்தது. ஆனால் கரோனா பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகளால் இந்த எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலுக்கு முன்பு யாத்திரைக்காக 21 இடங்களில் இருந்து சவூதிக்கு புறப்பட முடியும். இது தற்போது கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை, லக்னெள, அகமதாபாத், கொல்கத்தா, குவாஹாட்டி, ஸ்ரீநகா் என 10 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.
கரோனா பரவலுக்குப் பிறகு, முதல்முறையாக இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.