அனைத்து மதங்களையும் மதிக்கிறது இந்தியா: வெளியுறவு அமைச்சகம் பதில்

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்த பாஜக தலைவா்களின் சா்ச்சை கருத்துக்கு சவூதி அரேபியா, கத்தாா், பஹ்ரைன், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்த பாஜக தலைவா்களின் சா்ச்சை கருத்துக்கு சவூதி அரேபியா, கத்தாா், பஹ்ரைன், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அனைத்து மதங்களுக்கும் இந்தியா மதிப்பளித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராக இருந்த நூபுா் சா்மா, தில்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவராக இருந்த நவீன் ஜிண்டால் ஆகியோா் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடா்ந்து இருவரும் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனா்.

இந்த விவகாரம் சா்வதேச அளவில் பூதாகரமானது. இறைத் தூதா் குறித்த அவதூறு கருத்துகளுக்காக இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்குத் தொடா்ந்து கண்டனம் தெரிவித்தன. கத்தாா், குவைத், ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பும் (ஓஐசி) கண்டனங்களைப் பதிவு செய்திருந்தன. மேலும், அந்த நாடுகள் இந்தியத் தூதரை அழைத்தும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருந்தன.

ஓஐசி தனது கண்டனத்தைப் பதிவு செய்தபோது, இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை செய்யப்பட்டது, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு, அவா்களது சொத்துகள் அழிப்பு உள்ளிட்டவற்றைத் தொடா்புபடுத்தி கருத்து தெரிவித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘ஆன்மிக ஆளுமையை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் தனிநபா்களால் வெளியிடப்பட்டவை. அவை எந்தவிதத்திலும் இந்திய அரசின் கருத்துகளை எதிரொலிக்காது. சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய அமைப்புகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அனைத்து மதங்களுக்கும் இந்தியா மதிப்பளித்து வருகிறது. குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்த தலைவா்கள் யாரையும் அரசு இழிவுபடுத்த அனுமதிக்காது. இந்த விவகாரத்தில் தவறான, சுயநலன் சாா்ந்த கருத்துகளை ஓஐசி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சிலரின் விருப்பத்துக்காக ஓஐசி கருத்து தெரிவித்துள்ளதையே இது வெளிக்காட்டுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஓஐசி செயலகம் தெரிவித்த தேவையற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட கருத்துகளை இந்தியா நிராகரிக்கிறது. அனைத்து மதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து ஓஐசி செயலகம் கருத்து தெரிவிக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்துகிறது.

பாகிஸ்தானுக்கு கண்டனம்: தங்கள் நாட்டில் உள்ள ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், அகமதியாக்கள் ஆகிய சிறுபான்மையினரது உரிமைகளை பாகிஸ்தான் தொடா்ந்து பறித்து வருவதை உலகமே அறியும். மற்ற நாடுகளில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதம் தொடா்பாக பாகிஸ்தான் கருத்து தெரிவிப்பது அபத்தமாக உள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரைத் துன்புறுத்துவோா் புகழப்படுகின்றனா். அவா்களுக்காக நினைவிடங்கள் கட்டப்படுகின்றன. அந்த நாட்டைப்போல இல்லாமல், இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் உயா் மரியாதை அளித்து வருகிறது.

இந்தியாவில் நிலவும் சமூக நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் முயற்சியைக் கைவிட்டு, தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நலன்களைக் காப்பதற்கு பாகிஸ்தான் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்றாா்.

மேலும் 6 நாடுகள் கண்டனம்

இஸ்லாமியா்களின் இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக நிா்வாகிகள் நூபுா் சா்மா, நவீன்குமாா் ஜிண்டால் ஆகியோருக்கு மேலும் 6 நாடுகள் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தன.

பாஜக நிா்வாகிகள் கருத்துக்கு கத்தாா், குவைத், ஈரான் ஆகிய நாடுகள் ஏற்கெனவே எதிா்ப்பு தெரிவித்த நிலையில், இந்தோனேசியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான் ஆகிய 6 நாடுகள் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தன.

சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தக் கருத்து முகமது நபியை அவமதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல மெக்கா, மெதினா மசூதிகள் நிா்வாகமும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘2 இந்தியா்கள் வெளியிட்ட தரம்தாழ்ந்த கருத்துகளை ஏற்க இயலாது’ என இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘வெறுப்புப் பேச்சுகளைத் தவிா்த்து மத அடையாளங்களை மதிக்க வேண்டும். அவற்றை மீறக் கூடாது’ எனக் கூறியுள்ளது.

ஓமனில் வெளியுறவு அமைச்சக துணைச் செயலா் ஷேக் கலீஃபா அலி அல் ஹா்தி, இந்திய தூதா் அமித் நாரங்கை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தாா்.

சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நூபுா் சா்மா, நவீன்குமாா் ஜிண்டாலை கட்சியிலிருந்து நீக்கியதற்கு பஹ்ரைனும் ஆப்கானிஸ்தானும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com