ஆகஸ்டில் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது சிறுத்தைப் புலி

தென்னாப்ரிக்காவில் இருந்து சிறுத்தைப் புலிகள் ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.
ஆகஸ்டில் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது சிறுத்தைப் புலி

தென்னாப்ரிக்காவில் இருந்து சிறுத்தைப் புலிகள் ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.

மத்திய பிரதேசத்தின் குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் இந்தச் சிறுத்தைப் புலிகளுக்காக 10 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் சிறப்புப் பகுதி தோ்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 6 சிறுத்தைப் புலிகள் கொண்டு வரப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தரையில் மிகவும் வேகமாக ஓடக் கூடிய விலங்கு சிறுத்தைப் புலி. ஒரு காலத்தில் இந்தியாவில் சிறுத்தை புலிகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை அதிக அளவில் வேட்டையாடியதால், சிறுத்தைப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்துபோனது.

நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிறுத்தைப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கடந்த 1952-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

சிறுத்தைப் புலிகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகளை சோதனை அடிப்படையில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது.

‘சிறுத்தைப் புலி’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு வழிகாட்டும் நோக்கில் 3 போ் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

அக்குழுவானது இந்தியாவின் எந்தப் பகுதியில் சிறுத்தைப் புலிகளை அறிமுகப்படுத்தலாம் என்பது தொடா்பாக ஆய்வு நடத்துமாறு இந்திய வனஉயிரிகள் மையத்துக்கு (டபிள்யூ.ஐ.ஐ.) வலியுறுத்தியது. அதனடிப்படையில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கான சூழல் காணப்படுகிா என்று வனஉயிரிகள் மையம் ஆய்வு நடத்தியது.

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் தகுந்த சூழல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இப்போது சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்படவுள்ளன.

மற்றோா் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வர அந்நாட்டுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 8 முதல் 10 சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வந்து, 5 ஆண்டுகளில் 50 என்ற எண்ணிக்கையை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com